பக்கம் எண் :

124தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

காப்பியங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்தவை
என்றும் அவ்வாய்வாளர் கூறுவர். மணிமேகலை அறங்கேட்டது அறவண
அடிகளிடம். திந்நாகர் காஞ்சிமா நகரில் பிறந்து வாழ்ந்தவர். அவரே அறவண
அடிகளாரிடம் அறங்கேட்டுத் தெளிவு பெற்றிருக்கக்கூடும். மணிமேகலை
வரலாறு நிகழ்வதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் அறவண
அடிகள் என்று இக் காப்பியம் கூறுகின்றது. திந்நாகர் அறவண அடிகளுக்குப்
பிற்பட்டிருந்த பௌத்த அறிஞர்களிடம் அறங்கேட்டுத் தெளிந்திருப்பார்
என்று ஊகிக்க இடமுண்டு.

     மொழியியல் கூறுபாடுகள் சிலவற்றைக் கொண்டும் இவ்விரு
காப்பியங்களையும் காலத்தால் பிற்பட்டவை எனவுங் கூறுவர். பழஞ் சங்க
இலக்கியங்களில் காணப்படும் கருத்து அமைப்புகள், சொல்லாட்சி முதலிய
கூறுபாடுகளுக்கும் இக் காப்பியங்களின் இலக்கிய நடை, சொல்லாட்சி
முதலியவற்றுக்குமிடையே ஆழ்ந்த வேறுபாடு உண்டு. இந் நூல்களில்
செய்யுள் இலக்கணத்தின் வளர்ச்சியைக் காண்கின்றோம். இவற்றில்
ஆளப்பெறும் ; ‘நான்’, ‘உன்’, ‘இந்த’ என்னும் சொற்கள் சங்க
இலக்கியங்களில் ஆளப் பெறுவதில்லை. மேலும், நரபலி, சாபம், விதானம்,
கலி, சித்திரம், பரகதி, விரதம், சாந்தி, தோரணம், நாதன் ஆகிய வடமொழிச்
சொற்கள் இக் காப்பியங்களில் விரவி வருகின்றன. இக்காரணம் போதிய
சான்றாகாது. ஆரிய மொழியுடன் தொடர்புகொண்ட சமணமும் பௌத்தமும்
இக் காப்பியங்களுள் தொடக்க முதல் இறுதிவரையில் ஆங்காங்கு விளக்கம்
பெறுகின்றன. வேறு சில சமயங்களின் கருத்துரைகளும் இவற்றில் இடம்
பெற்றுள்ளன. எனவே, இவற்றில் வடமொழிக் கலப்புச் சற்று மிகுதியாகவே
காணப்படுவதில் வியப்பேதுமில்லை. இம் மொழிக்கலப்பைக் கொண்டு இக்
காப்பியங்கள் சங்க இலக்கியங்கட்குச் சற்றே பிற்காலத்தியவை என்று
ஊகிக்கலாமே அல்லாது பல நூற்றாண்டுகள் பிற்பட்டவை என்று
கொள்ளுவதற்கு இடமில்லை.

     ‘பங்களர்’ என்று ஒரு சொல் சிலப்பதிகாரத்தில் ஆளப்பெறுகின்றது.67
இது வங்க நாட்டைக் குறிக்கும் என்றும், கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்
கல்வெட்டுகளிற்றான் இச் சொல் இடம் பெற்றுள்ளதென்றும், ஆகையால்
சிலப்பதிகாரம் 11ஆம் நூற்றாண்டிலோ, அதற்கு இருநூறு ஆண்டுகள்
முந்தியோ இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.
பங்களர் என்னும் பெயர்ச் சொல் வங்க நாட்டைத்தான் குறிக்கின்றது

    67. சிலப்.25: 157.