பக்கம் எண் :

220

             11. தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு
             முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரையில்
                        சமூக நிலை

     சங்க காலம் கழிந்துக் களப்பிரரும் பல்லவரும் தமிழகத்தில் நுழைந்து
அரசியல் செல்வாக்கு எய்திய பிறகு தமிழரின் பண்பாடுகள் புதிய
வடிவங்களில் மலர்வதைக் காணலாம். வடமொழியும், ஆரிய சமயங்கள்
தத்துவங்கள் ஆகியனவும், புராணங்களும் தமிழகத்தில் நுழைந்து தமிழர்
வாழ்வில் பல புதுமைகளை வளர்த்தன. தமிழர் தம் பண்டைய
பண்பாடுகளையும், ஐந்திணை வாழ்வையும், இசையையும், கூத்தையும்,
சங்கநூல்கள் காட்டிய அறத்தையும், வாழ்க்கை முறைகளையும்
மறந்துவிட்டனர். குலப் பிரிவுகளும், பிராமணரின் மேம்பாடும், வடமொழியின்
ஏற்றமும், தமிழ்மொழிக் கலப்படமும் தமிழரின் சமூகத்தில் துறைகள்தோறும்
ஏற்பட்டன. அதனால் மக்களின் பெயர் வடிவங்களிலும், அவர்கள் எண்ணிய
எண்ணங்களிலும், வாழ்ந்த வாழ்க்கையிலும், அரசியலிலும் புரட்சிகரமான
மாறுபாடுகள் தோன்றின. எனினும் அவர்களின் அடிப்படையான
பண்பாடுகளான விருந்தோம்பல், புதுமைவேட்கை, எப்பொருள் யார்யார்வாய்க்
கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணவேண்டும் என்னும் துடிப்பு
ஆகியவை மாறவில்லை. பிறமொழிச் சொற்கள் தமிழ் வடிவு ஏற்றுத் தமிழ்
மொழியில் கலப்பதைப்போல அன்னிய பழக்கவழக்கங்களும், பண்பாடுகளும்,
சமயக் கருத்துகளும் தமிழ் மரபுக்கேற்ப உருமாறித் தமிழரின் சமூகத்தில்
எல்லாத் துறைகளிலும் ஆட்சி பெற்றன.

     தமிழகத்தில் நான்கு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரையிலும்
காணப்பட்ட சமூக வளர்ச்சிகளை இனி ஆய்ந்தறிவோம்.