| மன்னர்கள் இலங்கையின்மேல் படையெடுத்ததற்கும், இலட்சத் தீவுகளை வென்றதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள. அரசு தண்டிய இறைப் பணத்தால் மன்னனுடைய பண்டாரங்கள் நிரம்பின. உப்பு எடுக்குந் தொழில் மன்னருடைய ஏகபோக உரிமையாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. தறிகளில் நெசவு செய்பவர்கள், நூல் நூற்போர், கள்ளிறக்குவோர், இடையர்கள் ஆகியவர்கள்மேல் தொழில்வரிகள் விதிக்கப்பட்டன. இவ் வரிகளே யன்றி ஈழம் பூட்சி, இடைப் பூட்சி, பிராமண ராசக் காணம், கலியாணக் காணம், காசுக் காணம், தட்டுக் காணம், விசக்காணம், பாறைக்காணம், தரகு, செக்கிறை முதலிய வரிகள் பல தண்டப்பட்டன. கன்னார்கள், தோல்கருவிகள் செய்பவர்கள், கழைக்கூத்தாடிகள், ஆசீவகர்கள், தரையடி நீர் காண்பவர்கள், சூதாடிகள், சவரத் தொழிலாளர் ஆகியவர்களிடத்திலிருந்து வரிகள் தண்டப்பட்டன.12 சில நிலங்களுக்குப் ‘பட்டி’ என்றும், ‘பாடகம்’ என்றும் பெயர் வழங்கின. அவற்றைத் தானமாகப் பெற்றவர்களின் பெயர்களின் முன்பு பாடகம் என்னும் சொல் இணைக்கப்பட்டது. பாடகம் மாத்துருபூதி சடங்கவி சோமயாஜி, பாடகம் சுவாமிதேவ சடங்கவி என்ற பெயர்கள் அதற்குச் சான்றாகும். பல்லவர் காலத்தில் வழங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன ; முகத்தல் அளவைகள் கருநாழி, பொற்கால், காடி, நால்வா நாழி, நாராய நாழி, மானாய நாழி, பிழையா நாழி, விடேல்விடுகு உழக்கு, செவிடு, சோடு, மரக்கால், குறுணி, பதக்கு, கலம் ஆகியவை ; பொன் அளவைகள் கழஞ்சு, மஞ்சாடி என்பன. வெள்ளியாலும் செம்பாலும் நாணயங்கள் வழங்கி வந்தன. பல்லவ மன்னர்கள் உழவுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியதாகும். அவர்கள் மிகப் பெரிய ஏரிகள் கட்டினார்கள். முதலாம் மகேந்திரவர்மன் கட்டிய மகேந்திரவாடி ஏரியானது மிகவும் பெரியதாகும். அதனுடைய மதகுநீர் பீரிட்டோடி ஏழெட்டுக் கல் தொலைவுக்கப்பாலும் நிலங்களை ஊட்டி வளர்த்தது. மாமண்டூர் ஏரியும், உத்தரமேரூர் ஏரியும் இம் மன்னன் அமைத்தவையோம். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காவேரிப் பாக்கத்து ஏரியைக் கட்டினான். இவ்வேரி இருபத்தேழு சதுர மைல் பரப்புள்ளது. முதலாம் பராந்தகன் காலத்தில இவ் 12. S.I.I. XI. Cop. .pl. (2) |