| (கி.பி. 945-53) என்பானுக்குத் தூது ஒன்று அனுப்பினான். அக் கட்டளைக்கு உதயன் மறுக்கவே பராந்தகன் அவன்மேல் படையெடுத்தான். அவனுடைய படைபலத்துக்கு அஞ்சி உதயன் ரோகணம் என்ற பகுதிக்கு ஓடிப்போய்விட்டான் ; போகும் போது பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் உடன் கொண்டு போனான். பராந்தகனின் நோக்கம் நிறைவேறாமற் போய்விட்டது. அவனும் ஏமாற்றத்துடன் தன் நாடு திரும்பினான். கேரள மன்னனும், கீழ்ப்பழுவூரைச் சேர்ந்த பழுவேட்டரையரும், கொடும்பாளூர் வேளிர்களும் பராந்தகனுக்குத் துணைபுரிந்தார்கள். பராந்தகனின் மக்களுள் ஒருவனான அருள்கேசரி என்பான் கொடும்பாளூர்ப் பரம்பரையைச் சார்ந்த தென்னவன் இளங்கோ வேளான் என்பவனின் மகள் பூபதி ஆதிச்ச பிடாரியை மணம் புரிந்துகொண்டான். கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதிக்குப் பராந்தகன், ‘வாணாதிராசன்’ என்ற பட்டமொன்றை வழங்கிப் பாராட்டினான். வைதும்பரை வென்று சோழ மன்னன் வெற்றிவாகை சூடினான். பராந்தகனை அரியணையினின்றும் இறக்கித் தன் மகள் வயிற்றுப் பிறந்த கன்னரதேவனைச் சோழ நாட்டு மன்னனாக முடிசூட்டுவிக்கும் சூழ்ச்சி ஒன்றில் இராஷ்டிரகூடன் இரண்டாம் கிருஷ்ணன் ஈடுபடலானான். தனக்குத் திறை செலுத்தியவர்களான வாணகோவரையரின் துணைகொண்டு அவன் சோழ நாட்டின்மீது போர் தொடுத்தான். கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதியின் துணையைப் பெற்றுப் பராந்தகன் தன் படை வலிமையைப் பெருக்கிக்கொண்டான். பராந்தகனுக்குக் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி படைத்துணை நல்கினான். சோழரின் படைகளும் இராஷ்டிரகூடரின் படைகளும் திருவல்லத்தில் மோதிக்கொண்டன (கி.பி. 910- 11). கிருஷ்ணனும் அவனுடைய போர்த் துணைவரும் படுதோல்வி யடைந்தனர். பராந்தகன் வீரவெற்றி கண்டான் ; ‘வீரசோழன்’ என்ற விருது ஒன்றையும் ஏற்றுக்கொண்டான். வாணகோவர்கள் மிகப் பழையதொரு பரம்பரையில் வந்தவர்கள். இவர்கள் திருக்காளத்திக்கு வடக்கே அரசாண்டு வந்தனர். வாதாபி சாளுக்கர்களின் ஆதிக்கம் ஓங்கி வரவே வாணகோவர்களின் அரசியற் செல்வாக்கும், ஆட்சி எல்லைகளும் சுருங்கிவந்தன. பராந்தகன் காலத்தில் இவர்களுடைய ஆட்சி வரம்பானது பாலாற்றுக்கு வடக்கிலே புங்கனூருக்கும் திருக்காளத்திக்கும் |