| கிறித்தவர்கள் பட்ட துன்பங்கட்கு இறுதியாக ஒரு முடிவு ஏற்பட்டது. இராணி மங்கம்மாள் 1689-ல் அரசாட்சியை ஏற்றாள். அவளுக்குக் கிறித்தவர்களிடம் பரிவு ஏற்பட்டது. பாதிரிகளும் தம் பணியில் முனைப்புற்றார்கள். டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியருக்கும் டச்சுக்காரருக்குமிடையே நேரிட்டு வந்த பூசல்களிலும் போராட்டங்களிலும் போர்ச்சுகீசியரின் கால் சறுக்கி வந்தது. அவர்கள் இலங்கையை டச்சுக்காரரிடம் இழந்தனர் (1638) ; பிறகு டச்சுக்காரர்கள் தூத்துக்குடியையும் (1658), நாகப்பட்டினத்தையும் (1659) போர்ச்சுகீசியரிடமிருந்து பறித்துக்கொண்டனர். கேரளக் கடற்கரையில் சில ஊர்களும் போர்ச்சுகீசியரிடமிருந்து டச்சுக்காரரின் கைக்கு மாறின. சோழ மண்டலக் கடற்கரையில் நாகப்பட்டினமே டச்சுக்காரரின் தலைநகராக அமைந்தது. அங்கு டச்சுக்காரர்கள் வலிமையான கோட்டை கொத்தளங்கள் கட்டிக்கொண்டனர். அக் கோட்டையை டச்சுக் கம்பெனியின் கவர்னர் தம் இருப்பிடமாகக் கொண்டார். டச்சுப் பாதிரியான ஆபிரகாம் ரோசர் புலிக்காட்டில் தங்கித் தம் பணிகளைச் செய்துவந்தார். டச்சுக்காரரின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே போயிற்று. அவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்துவந்தது. வாணிகத் தொழிலிலும், கப்பலோட்டுவதிலும், தொழில்கள் அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அறிவு நுட்பத்திலும், டச்சுக்காரர்கள் ஏனைய ஐரோப்பியரைவிடப் பலபடிகள் மிஞ்சி நின்றார்கள். வாணிகத்தைத் தொடர்ந்து நடத்திவரவும், கைப்பற்றிய நாடுகளை ஆண்டு அனுபவிப்பதற்காகவும் ஹாலந்தில் ஐக்கியக் கம்பெனி ஒன்று நிறுவப்பட்ட பிறகு, டச்சுக்காரரின் கைகள் வலுவுற்றன. தம் நோக்கம் இன்னதெனவும், அதை அடையும் முறையும் துறையும் இன்னவெனவும் டச்சுக்காரர்கள் திட்டமாகவும், தெளிவாகவும் உணர்ந்திருந்தனர். எனவே, அவர்கள் தம் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதில் துரிதமான பயனைக் கண்டனர். டேனியரும் பிரெஞ்சுக்காரரும் தரங்கம்பாடியில் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகர்கள் கோட்டை ஒன்றைக் கட்டிக்கொண்டு தம் வாணிகத்தைத் தொடங்கினர். இந்தியாவில் கொள்முதல் செய்த சரக்குகளை அவர்கள் மலேயத் தீவுகட்கு ஏற்றிச்சென்று விற்பனை செய்து அவற்றுக்கு ஈடாக அங்கிருந்து சம்பாரப் பண்டங்களை வாங்கி |