பக்கம் எண் :

ஐரோப்பியரின் வரவு 475

வரிகளை வற்புறுத்திப் பெற்றான். கம்பெனிக்குத் துணிகள் வழங்கி வந்த
நெசவாளரைத் துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான்; அவர்களைச்
சாட்டையால் அடித்தான். சில நெசவாளரின் கைகளைப் பின்புறம் சேர்த்துக்
கட்டிவைத்து அவர்கள் உடம்பில் அட்டைகளைக் கடிக்கவிட்டான்.
கட்டபொம்மனின் கையாள்கள் நெசவாளரின் வீடுகளைக் கொள்ளையிட்டு
அவர்கள் பெண்களின் வாயில் மண்ணைக் கொட்டினார்கள். நெசவாளர்களின்
கண்களில் கள்ளிப்பால் ஊற்றப்பட்டது. பலருடைய பற்கள் நொறுக்கப்பட்டன.
மேலும் பலர் சாட்டையாலும் செருப்பாலும் புடைக்கப்பட்டனர் எனச் சிலர்
கூறுகின்றனர்.

     கட்டபொம்மனின் கொடுங்கோன்மை கம்பெனியின் செவிகட்கு எட்டிற்று.
இராமநாதபுரத்துக் கலெக்டர் ஜாக்சன் என்பான் தன்னை வந்து சந்திக்குமாறு
கட்டபொம்மனுக்கு ஆணை பிறப்பித்தான். அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு
நானூறு கல் தொலைவு பின்தொடர்ந்து சென்றும் கட்டபொம்மனுக்கு
ஜாக்சனுடைய பேட்டி கிடைக்கவில்லை. தொடர்ந்து சில கலகங்கள்
நேரிட்டன. கம்பெனியின் பக்கலிலும், கட்டபொம்மன் பக்கலிலும் பலர்
கொல்லப்பட்டனர். கம்பெனிச் சேனைத் தலைவன் கிளார்க் என்பவனும்
கொல்லப்பட்டு மாண்டான். கட்டபொம்மனே அவனைக் கொன்றான் என்று
கம்பெனி அவன்மீது குற்றம் சாட்டிற்று.

     கட்டபொம்மனும், அவன் தம்பி ஊமைத்துரையும் கம்பெனியின்
பிடியினின்றும் தப்பியோடிப் பல கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி,
மக்களைக் கொன்று, அவர்கள் உடைமைகளைச் சூறையாடி மக்களுக்கு
அல்லல் விளைத்தனர். கட்டபொம்மனுக்கும் கம்பெனிக்கும் இடையிட்டெழுந்த
பூசல்கள் புயலாக மாறின. கம்பெனியின்மேல் கட்டபொம்மன் கொண்டிருந்த
வெறுப்புப் புகைந்து கொழுந்துவிட்டு எரியலாயிற்று. அவன் திருநெல்வேலி,
இராமநாதபுரம் பாளையக்காரர் பலரைத் தனக்கு உடந்தையாக்கிக்
கொண்டான்; தனக்கெனப் பெரும் படையையும் திரட்டலானான். மேஜர்
பானர்மேன் என்ற படைத் தலைவனிடம் பிரிட்டிஷ் அரசாங்கம்
கட்டபொம்மனை ஒறுக்கும் பணியை ஒப்படைத்தது. பானர்மேனுக்கும்
கட்டபொம்மனுக்கும் இடையே பல இடங்களில் போர்கள் நிகழ்ந்தன.
கட்டபொம்மனுக்கு உதவிய சுந்தர பாண்டிய நாயக்கனும், தானாபதிப்
பிள்ளையும் தூக்கிலிடப்பட்டனர்.