பக்கம் எண் :

132
132

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


   

துளைக்கருவிகள்: புல்லாங்குழல், நாகசுரம், முகவீணை, மகுடி, தாரை,
கொம்பு, எக்காளை முதலியன. இவை மரத்தினாலும் உலோகத்தினாலும்
செய்யப்படுவன. சங்கு இயற்கையாக உண்டாவது.
 

குழல்: இதற்கு வங்கியம் என்றும், புல்லாங்குழல் என்றும் பெயர்கள்
உண்டு. மூங்கிலினால் செய்யப்படுவது பற்றிப் புல்லாங்குழல் என்னும் பெயர்
உண்டாயிற்று. சந்தனம், செங்காலி, கருங்காலி என்னும் மரங்களினாலும்
வெண்கலத்தினாலும் செய்யப்படுவதும் உண்டு. மூங்கிலினால் செய்யப்படுவது
சிறந்தது. துளைக்கருவிகளில் மிகப் பழைமையானதும் சிறந்ததும் இதுவே.

‘‘குழல் இனிது யாழ் இனிது’’ என்று திருவள்ளுவர் திருக்குறளில்
கூறுகிறபடியினாலே, இதன் பழைமை நன்கு அறியப்படும்.

 

     இதன் பிண்டி இலக்கணம், துளையளவு இலக்கணம், துளைகளின் இசை
பிறக்கிற இலக்கணம் முதலியவற்றை அடியார்க்கு நல்லார் உரையில் காண்க.1
 

இது முற்காலத்தில் இசைப்பாட்டிற்கும் நாட்டிய நடனங்களுக்கும் பக்க
வாத்தியமாகப் பெரிதும் வழங்கி வந்தது. இக்காலத்தில் இவ்வினிய
இசைக்கருவி தனியே தனியிசையாகப் பக்க வாத்தியங்களுடன்
வாசிக்கப்படுகிறது.

 

நாகசுரம்: இது மிகப் பிற்காலத்தில் உண்டான இசைக்கருவி எனத்
தோன்றுகிறது. இது மரத்தினாலும், வெண்கலம் முதலிய உலோகத்தினாலும்
செய்யப்பட்ட துளைக்கருவி. சங்ககாலத்து நூல்களிலும் இடைக்காலத்து
நூல்களிலும் இக்கருவி கூறப்படவில்லை.கோயில்களில் இசைக்கருவி
வாசிப்போருக்கு மானியம் அளிக்கப்பட்ட செய்திகளைக் கூறுகிற சோழ,
பாண்டிய அரசர் சாசனங்களிலும் இக்கருவி கூறப்படவில்லை. எனவே, இது

 


1. சிலம்பு. அரங்கேற்று காதை, 26ஆம் அடி உரை.