பக்கம் எண் :

அகத்திணைப் பாட்டு257

வேண்டும் எனப் பண்புறுத்துவது அகத்திணை, வாழ்க்கையில் மனம் குளிரும்
காமத் தணிவு இன்றியமையாதது, இகழ நெகிழத் தக்கதன்று என்று
அறிவுறுத்துவது அகத்திணை. தொல்காப்பியத்து மெய்ப்பாட்டியலைக்
காண்மின். அகப்பொருள் மெய்ப்பாடுகளே அவண் பெரிதும் நுண்மையாக
இடம் பெறுகின்றன. புணர்வின் துவக்க வேட்கையினையும் இடைநிலைப்
பெருக்கத்தினையும் இறுதித் திளைப்பினையும் வகை வகையாகத்
தொல்காப்பியம் எடுத்துக் கற்பிக்கின்றது. புணர்ச்சியின்றித் தனித்துறுங்

காலத்துக் காமத் தாக்குதலால் நெஞ்சொடு உடலும் நிலை திரிகின்ற
அலைவுகளைத் தொல் காப்பியத்திலும் அகப் பாடல்களிலும் கற்கின்றோம்.


பாற்கல்வி முறை

     இல்லறம் புகுவார்க்கும் இல்லறம் புகுந்தார்க்கும் காதற் கலையை
நேர்படக் கற்பிப்பது அகத்திணையின் குறிக்கோள். அகவிலக்கிய மாந்தர்க்குப்
பெயர்கூறின், வரலாறு குறிப்பின், கற்பிக்கும்முறை இழுக்குப்படும்; குறிக்கோள்
தோன்றாது. ஒரு பயன் காணவேண்டின் அதற்கேற்ற முறையைக்
கடைப்பிடிக்க வேண்டும். கல்வி கொடை வீரம் நாட்டுப்பற்று மொழிப்பற்று
என்ற பண்புகளுக்கு வாழ்ந்த முன்னோர்களைக் காட்டலாம். வள்ளல்
அழகப்பர் இருந்த உடைமையை வழங்கினார். ஈட்டிய பொருளை வழங்கினார்.
நூலாலைகளை வழங்கினார், கட்டிய வீட்டை வழங்கினார். புழங்கிய தட்டு
முட்டுக்களை வழங்கினார், அரிதில் தொகுத்த நூல்களை வழங்கினார்,
அணுவணுவாக உடலும் உயிரும் எல்லாம் வழங்கினார் காண் என்று
அணியணியாகச் சொல்லிக் காட்டலாம். ‘கொடுக்கிலாதானைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பாரிலை” என்று பெயர் சுட்டிக் கொடை சுட்டலாம். கேட்க
இனிக்கும், நாணங்குன்றாது கேட்கலாம். பூதப்பாண்டியன் சிறந்த இல்லறத்தான்;
“பேரமர் உண்கண் இவளினும் பிரிக” என்று வஞ்சினங் கூறினான்;
மனைவியொடு என்றும் பிரியா வாழ்க்கை வேண்டினான்; அவனது தேவியும்
அவனைப் போலப் பாடவல்ல புலமை பெற்றவள்; கணவன் இறந்த போது
துயர் பொறாது உயிர் விட்டனள். இப்பாண்டியக் குடும்பத்தைப் பார்மின்
என்று இல்லறத்திற்கு
எடுத்துக் காட்டலாம், நாண் நீங்காது கேட்கலாம்.
திருமணத்தார் எல்லாரும் காதலர்கள்தாம், பாலின்பம் பருகியவர்கள் தாம்;
எனினும் அவர்களை நல்ல இல்லறத்திற்கு எடுத்துக் காட்டுவதன்றிக் காமப்
புணர்ச்சிக்கு எடுத்துக் காட்டுவதுண்டோ? இன்னணம் ஊடினர் கூடினர்
உரையாடினர் என்று காமக்கலவியைப் பெயர்சுட்டிக் கற்பிக்கும் வழக்கு
உண்டோ?