பக்கம் எண் :

28தமிழ்க்காதல்

வேறு காலத்து வெவ்வேறு சூழ்நிலையில் ஆங்காங்கு நிகழ்ந்து வரும் தனி
நிகழ்ச்சிகளின் ஒரு கோவை; அவ்வளவே. ஐந்திணைக்கண் தலைவனது
பரந்தமை கூறல் பொருந்துமா? எனின், அது சமுதாயத்தின்
பொதுமனப்பாங்கினைப் பொறுத்தது. காம வாழ்க்கையில் காதலன் காதலி தம்
உள்ளப் புணர்வே அகத்திணையின் உயிர் நாடி. இந் நாடி கொண்டு காமக்
காதலைப் புனைவதே அதன் குறிக்கோள்.


     5. அகத்திணைப்பாட்டு என்னும் இயலுள் அகத்திணையில் பொருளுக்கு
மட்டும் வரம்பன்று; பொருளைச் சொல்லும் முறைக்கும் வரம்பு உண்டு
என்பது கற்கத்தகும். வரம்பிட்ட பாற்பொருளும் வடித்திட்ட இலக்கியமுறையும்
இரண்டறக் கலந்த ஒருமைப்பண்பே அகம் எனப்படும். பொருட்கூற்றிலும்
அதனைப் புலப்படுத்தும் நெறியிலோ சிறிது வழுவினும் போதும், ஒருபாட்டு
யாப்பு வழுவாத போதும் அகப்பாட்டன்று என்று தள்ளப்படும். சுட்டிப்
பெயர்கூறா இலக்கணமும் அதன் உட்கருத்தும், அகம் என்ற சொல்லின்
வழக்குப் பொருளும், அச் சொல் இலக்கியப் பெயராய் ஆளுதற்கு உரிய
தகையும், தமிழ்ச்சங்கம் இருந்த உண்மையும், அகத்திணைப் படைப்புக்கு
அச்சங்கம் உதவிய அறிவுத் திறமும் இவ்வைந்தாம் இயலால் விளங்குவன.


     6. அகத்திணைப் புலவர்கள் என்னும் இயலின்கண் முன்னை இயல்களிற்
காட்டிய ஆராய்ச்சிக் கூறுகளின் விளக்கமாக, அகப்புலவோர்தம் செய்யுட்களை
நுணுக்கங் காண முயல்வேன். பாடல் எண்ணளவுப்படி அகப்புலவர்களின்
எண்ணளவுப்பட்டியலை முதற்கண் காணலாம். பொருளிலும் எவ்வளவோ
அடக்குமுறை, அதனை ஆளவேண்டும் முறையிலும் எவ்வளவோ அடக்குமுறை
கொண்ட அகத்திணையிலக்கியம் கவிஞர்களின் கற்பனைச்சிறகை ஒடிக்காதா?
கவிதை ஆர்வத்தை ஒடுக்காதா? எண்ணப் புதுமையைக் கொல்லாதா? என்று
ஐயப்படலாம். அகவிலக்கண விதிகளை மரபெனக் கொண்டு அறிவறிந்து
அடங்கிப் பாடிய காரணத்தினாற்றான், சங்கப் புலவர் எல்லார்தம் பாடல்களும்
காலங்கடந்த ஞாலமதிப்பைப் பெற்று வழிவழி வாழ்கின்றன. “காதற்பாட்டு
மரபுக்கும் உரிமைக்கும் இடைநிலைப்பட்ட மெல்லிய ஒரு சமநிலையை
வேண்டிநிற்கும். இச்சமநிலை ஒரு பாற் கோடினாலும் அப்பாட்டிற்கு நல்லுருத்
தோன்றாது” என ‘மணமும் அறங்களும்’ என்ற நூலாசிரியர் பெத்தரண் ரசல்

மொழிகுவர்1. இம்மொழிவு தமிழ் அகச் செய்யுட்களுக்கு நல்விளக்கமாம்.
 ____________________________________________________
     Love poetry depends upon a certain delicate balance between
convention and freedom and is not likely to exist in its best form
where this balance is upset in either direction.


                  - Bertrand Russel: Marriage and Morals, p. 62