| வருகதில் அம்ம எஞ்சேரி சேர அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளே னாயின் ஆர்வுற்று இரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல் பரந்து வெளிப்படா தாகி வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே (அகம். 276) இது பரத்தையின் வஞ்சினப்பாட்டு; சங்கப் பனுவலில் அரிய ஒரு பாட்டு. அகத்திணைக் கண்ணும் வஞ்சினம் கூறலாம், மரபுக்கு ஊறில்லை என்பதனையும், அகவிலக்கியம் சில மேல்நிலைகளில் நெகிழ்ச்சி யுடையது என்பதனையும் அறிக. “சென்ற தலைவன் எம் சேரிக்கு வரட்டும். அவன் கற்புடைப் பெண்டிர் காண ஒன்று செய்வல். அவனது மாலையையும் மேலாடையையும் பற்றி இழுப்பேன்; ஆசிரியர் அதற்கென்று பழக்கிய பெண் யானை ஆண் யானையை மடக்குதல் போல, தாய் பழக்கிய நான் என் கூந்தற் கயிற்றால் அவன் தோளைப் பிணித்து, அவனது மார்பைப் பிறர் யாரும் நெருங்காதவாறு சிறை செய்வேன். செய்யேனாயின், என் அன்னை பலர்க்கெனப் போற்றி வளர்த்த இவ்வழகு யார்க்கும் பயன்படாது ஒழிக. இரந்தவர்க்குக் கொடுக்காது ஈட்டியவன் பொருள் அவனிடத்தே தங்கி அழிதல்போல என் மெய்ந்நலமும் துய்ப்பார்க்குப் பயனின்றிக் கொன்னே கழிக. தாய் வேண்டியபடி பரத்தையாகாது, கற்புடையவளாய் இழிவேனாகுக” என்பது பரத்தையின் வஞ்சினம்; பரத்தமைக்கு ஏற்ற வஞ்சினம். “அவன் பெண்டிர் காண்” என்று பன்மையிற் கூறியதனால், அவனுக்கு மனைவியர் பலர் என்பது நடைக் கருத்தன்று. மனைவி ஒருத்திதான்; அவளை உயர்த்துவதுபோல் இழித்துக் கூறுகின்றாள் வஞ்சினப் பரத்தை என்று அறியவேண்டும். தலைவியின் வன்மை தலைவனது விடாப் பரத்தமைக்குத் தலைவி காரணம் என்பது போலப் பரணரின் சில பாடல்கள் அமைந்துள. வரைவில் மகளிர் தீண்டிய கணவனது மார்பைச் சிறிதும் தொட மறுக்கின்றாள் (“தொடுகலம் குறுக வாரல்” அகம் 197) ஒரு மனைவி. இளமகளிரொடு நீராடையணிந்து புதுப்புனல் ஆடினாய்; நாணிழந்தாய் என்று (அகம். 266) நேர்பட இடித்துரைக்கின்றாள் ஒரு பெண். யாம்தற் பகையேம் சேர்ந்தோர் திருநுதல் பசப்ப நீங்கும் கொழுநனும் சாலும்தன் உடனுறை பகையே (அகம். 186) என்பது ஒரு பரத்தையின் இடித்துக் காட்டு. மனைவிக்குப் பகை பரத்தையில்லை; உண்மையில் அவள் கணவனே என்று மிகப் |