| பாடல் பல யாத்திருப்பாரேல் அவர் தம் காதல் மாந்தர்களை ஒற்றுமை வேற்றுமை தெரிய ஆராயலாம். களவுத் தலைமக்கள் இயல்பும் கற்புத் தலைமக்கள் இயல்பும் ஒன்றாக உள்ளனவா? களவிலும் பல்வேறு துறையில் வரும் மாந்தர்கள் ஓரியல்பு உடையவர்களாக விளங்குகின்றனரா? கற்புத்துறை பலவற்றில் வரும் ஆட்கள் இயல்பும் ஒத்தனவா? என்றெல்லாம் காணமுற்படலாம். ஒருவர் ஐந்து களவுச் செய்யுட்கள் இயற்றியுள்ளார் என வைத்துக் கொள்வோம். அவ்வைந்திலும் தலைவன் காமவுணர்வு மிக்கவனாக விளங்கலாம். பகற் குறியும் இரவுக்குறியும் வரைவு நீட்டிப்பும் வேண்டுபவனாகத் தோன்றலாம். தலைவியும் அவ்வுணர்வு மிக்கவளாக இருக்கலாம். விருந்தாகத் தலைவன் இல்லத்துக்கு அழைக்கலாம். அப்புலவரே கற்புச் செய்யுட்கள் ஐந்து இயற்றியுள்ளனர் எனவும் வைத்துக் கொள்வோம். அவற்றிலும் கணவன் மனைவி பெருங் காமவுணர்வினராக அமையலாம். இங்ஙனம் ஒரு புலவன் தன் அகமாந்தர்களைத் தொடர்பு படுத்திப் பண்புநலம் காணும்போது, நிகழ்ச்சித் தொடர்பு இருப்பதுபோற் காணப்படும்; ஒரு பாட்டின்கண் இயற்கைப் புணர்ச்சித் துறையில் வரும் தலைவனே ஏனைக் களவுப் பாடல்களுக்கெல்லாம் தலைவன் ஆகவும், அக்களவுத் தலைவனே அப்புலவன் யாத்த கற்புப் பாடல்களின் தலைவன் ஆகவும் கொள்வதுபோற் காணப்படும். இளநாகரின் களவுத் தலைவன் நாணன் எனவும், கற்புத் தலைவன் நாணிலி எனவும் மேலே விளங்கியபோது, நாணுடையவனே பின்னர் நாணிலியாக மாறிவிட்டான் என்று ஒரு தலைவன் மேலாகக் கொள்வதற்கு இடந்தருகின்ற தன்றோ? இங்ஙனம் கொள்வதெல்லாம் பிழை. அகத்திணைத் தனியமைப்புக்கு முரண். ஓரகப் பாட்டிற்கும் மற்றொரு அகப்பாட்டிற்கும் ஆசிரியன் ஒருவனே எனினும் காதற்றொடர்பு இல்லை, கூற்றுத் தொடர்பு இல்லை. வரைவு கடாயது என்று நான்கு பாடல்கள் இருந்தாலும், தோழி தலைமகளைப் பிரிவின்கண் வற்புறுத்தியது என்று நான்கு பாடல்கள் இருந்தாலும் தலைவனது பரத்தமை பற்றித் தலைவி புலந்தாள் என்று கலிப்பாடல்கள் முப்பத்துக்குமேல் இருந்தாலும், இவ்வனைத்தையும் யாத்த புலவன் ஒருவனாயினுங்கூட, அப்பாக்களின் அகமக்கள் பாடல்தோறும் வெவ்வேறாகவே கருதப்படுவர், கருதப்படல் வேண்டும். இதுவே அகப்பாட்டின் அமைப்பு என்று அறிக. ஓர் அகப்புலவன் தன் செய்யுட்களை ஒருங்குவைத்து ஆராயும்போது, அவனது இலக்கியப் போக்கைக் காண முயல்கின்றோம். மாந்தர்களின் உள்ளோட்டங்களாக அவன் படைத்த திறங்களை அறிய முயல்கின்றோம். ஒருவன் தன் அகப்பாக்களை ஒருங்குகொண்டு ஆய்வதன் நோக்கம் புலவனது புலமையைப் பற்றியதேயன்றி அகமாந்தர்களைப் பற்றியதன்று; அவன் படைத்த துறைகளை யெல்லாம் பண்பில் ஒற்றுமை இருப்பினும் வேற்றுமையிருப்பினும் ஒருவர் மேலாக மாட்டி விடுவதற்கன்று. இரண்டு முதலான பாடல்கள் யாத்த புலவன் கற்பை முன் |