| குழந்தைத் துணை குழந்தைக் குடும்பம் கூறுபடாது என்ற ஓர் உலகியலைக் காட்டுவது மருதக்கலி. “கடவுட் கற்பொடு குடிக்கு விளக்காகிய புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்னராட்டி” (அகம். 184) என்று தாய்மையைப் போற்றிப் புகழ்வர் இளநாகனார். மனைக்கு விளக்காயினள் புதல்வன் தாய் (ஐங். 405) என்று மனைமையைப் பாராட்டுவர் பேயனார். “மனைக்கு விளக்கம் மடவாள், மடவாள் தனக்குத் தகைசால் புதல்வர்” என்று நான்மணிக்கடிகை ஆசிரியர் விளம்பிநாகனார் மனைவிளக்கு, குடி விளக்கு என இரண்டையும் கூறுவர். இதனால் நாம் அறியக் கிடக்கும் தமிழ் நாகரிகம் என்ன? கற்புடைய நங்கையே மனைவிளக்காவாள், அந்நங்கை பெறும் குழந்தையே குடி விளக்காகும் என்பது. இவ்வகை விளக்குகள் பரத்தையர்க்கு இல்லை என்பதை, அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்போடு எம்பா டாதல் அதனினும் அரிதே (நற். 330) என்னும் ஆலங்குடி வங்கனார் செய்யுளால் அறியலாம். கற்பொடு படாதவழி வரும் குழந்தை குடிக்கு விளக்காகாது என்ற குறிப்பு இம்மேற்கோள்களாற் பெறப்படும். மருதக்கலியில் பரத்தைத் தந்தையையும் துனிக்கும் தாயையும் இணைக்கும் மகனாகப் புதல்வன் விளங்குகின்றான். பகலெல்லாம் வேற்றிடத்துத் தங்கிய பரத்தனே என்று தலைவி சினந்தக்கால், தலைவன் யாதும் மறுமொழியாது மகனைத் தழுவிக்கொண்டு தூங்குவதுபோற் கிடப்பான். மகன் கிட்டச் செல்லாதே, எதிர் நில்லாதே என்று தலைவி மறுக்கும்போது, என் தந்தை பெயரிட்டவனை நான் அணைத்துக் கொள்வேன்; உனக்கென்ன? என்று சொல்லி விட்டுக் கன்று இருக்குமிடம் செல்லும் பசுப்போல மகன் இருக்குமிடம் பாய்வான். குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத் தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா அன்பிலி பெற்ற மகன் (கலி. 86) மகனுக்கு அறஞ்சொல்லுவதுபோல் அவன் தந்தையை இடித்து உரைக்கின்றாள் தலைவி. அப்போது காதலன் வந்து விட்டான். தாயின் பிடியை விடுத்துக்கொண்டு அத்தத்தா என்று அவன் மார்பிற்போய் விழுந்தான் மகன். அப்பாய்ச்சலைக் கண்ட தலைவி ‘மலைமேல் சிங்கம் பாய்ந்தாற்போல’ என்று உவமை கூறுகின்றாள். அவள் ஊடல் தீருகின்றாள் என்பது பெருமித வுவமையிலிருந்து பெறப்படுகின்றது. தலைவன் பரத்தமைக்குப் போயிருக்கும்போது, மகன் ஓர் ஆறுதல் பொருளாகத் தலைவிக்கு உள்ளான். கிண்கிணி ஒலிக்கும் அவன் தளர்நடையைக் கண்டும், அத்தத்தா என்னும் |