நாணக்கரை தாங்கும்?’ என்று தோழிக்கு உரைக்கின்றாள் களவுத் தலைவியும் (குறுந். 149). இங்ஙனம் வெள்ளிவீதியின் களவுப் பாக்கள் மிக்க காமப்பாக்களாக ஓடுகின்றன. புலமையாளின் கற்புப் பாடல்கள் எட்டும்தலைமகன் கூற்றெனக் கொள்ளக் கிடக்கின்றன. களவுபோல் இவைகளும் மிக்க காமத்தைப் புலப்படுத்துவன. திங்கள் ஒளியும் கடல் ஒலியும் அலையோசையும் அன்றிற்குரலும் தாழை மணமும் யாழிசையும் நடுயாமத்துத் தலைவியின் தன்மையைக் கலக்குகின்றன. ஊர்விழவும் வண்டின் புணர்ச்சியும் அவள் காமப்புண்ணைக் கிளறுகின்றன, கண்ணுறக்கத்தைக் கெடுக்கின்றன. என்னொடு பொருங்கொலிவ் வுலகம் உலகமொடு பொருங்கொலென் அவலமுற நெஞ்சே (நற். 348) உலகமே தனக்குப் பகை என்று வாடுகின்ற ஒரு பெண் நெஞ்சம். “மாலை என்பது நல்ல பொருள், மகளிர் விழாக் காலத்துச் சூடுதற்கென்று தொடுக்கும் மலரணி என்றுதான் கணவன் உடனுறைந்த காலத்துக் கருதி இருந்தேன். அச் சொல்லுக்கு வேறும் ஒரு பொருள் உண்டென அறியேன். கொழுநன் பிரிந்த பிற்பாடு மாலை என்றொரு காலம் உண்டு. அது உலகம் பரந்த துயரைத் தருவது என்று அறிந்து கொண்டேன்” என்பது தனிக்கிழத்தியின் புல்லுரை. இதனால் அவள் கணவனைப் பிரியாது நெடுநாள் காமந்துய்த்த இன்னிலை பெறப்படும். அடிக்கடி புணர்வும் பிரிவும் இருப்பின், உள்ளம் இன்ப துன்பப் பயிற்சிபெற்று வாழும். வள்ளல் அழகப்பர்போல் போக்கும் வரவும் கண்ட செல்வன் பொருள் நிலைப்பினும் அழியினும் நெஞ்சத் திருவாளனாக விளங்குவான். துய்த்தும் வழங்கியும் அறியாது, வரவுத்தடமே கண்ட செல்வத்தொகையாளனுக்குப் போக்குத்துளை சிறிது ஏற்படினும்,அது அவன் உயிர்போகும் வழியாக மாறிவிடும். செவ்விய வாழ்விற்கும் மனச்சால்பிற்கும் இன்ப துன்பம் என்னும் நிலைப்பயிற்சியும், போக்கு வரவு என்னும் பொருட் பயிற்சியும், புணர்வு பிரவு என்னும் காதற்பயிற்சியும் ஆகிய இருமுனைப் பயில்வுகள் வேண்டப்படும். வெள்ளி வீதியாரின் பாடல்களில் தலைமகளின் பெரும் புலம்பலுக்குக் காரணம் அவளது நெடுநாட் பெரும்புணர்வு, சின்னாட் சிறுபிரிவும் ஆற்றகில்லா உயிர்ப்பிரிவாக வளர்கின்றது. காடிறந் தனரே காதலர்; மாமை அரிநுண் பசலை பாஅய்ப் பீரத்து எழில்மலர் புரைதல் வேண்டும்... காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ (அகம். 45) |