பக்கம் எண் :

அகத்திணைப் புலவர்கள்367

பாடுவது ஏன்? பாடும் புலவர் உள்ளத்தை நாம் பார்க்க வேண்டும். அவனே
மறைத்து அகமாகப் பொதுவாகப் பாடியபோது, மறைவை ஒருவாறு
வெளிப்படுத்தி, அகத்திணையைப் புறத்திணை யாக்குதல் கல்வி நாகரிகம்
ஆகாது, அகத்திணையாவது ஓர் அடைக்கலத்திணை. ஒருவன் தன்
வாழ்க்கையிற்கண்ட நுணுகிய காமவுணர்ச்சிகளை உலகிற்குப் பொதுவாக்க
விரும்புவானேல், அகமாகப் பாடுவானாக; அங்ஙனம் பாடுவானேல், கற்பவர்
பாடற் கருத்தைக் கொண்டொழிவதல்லது, கருத்துக்கும் கருத்துரைத்த புலவன்
வாழ்விற்கும் தொடர்பு செய்யார்மன். அகவிலக்கியத்தின் மாட்சி இது.
அவ்விலக்கியம் காதலைப் பாடுவார்க்குத் தற்சுட்டாமை என்ற அடைக்கலத்தை
அளிக்கின்றது. இவ்வடைக்கலச் சிறப்பைக்கெடுத்தல் அகத்திணைச் சிறப்பைக்
கெடுப்பதாகும்.

     “மள்ளர் குழீஇய விழவினாலும்” (குறுந். 31) என்ற அகப்பாட்டு
ஆதிமந்தியார் இயற்றியது. அவர்தம் வாழ்க்கை வரலாற்றை அறிவோர்க்கு,
இப் பாட்டிலும் அதனைக் காணும் எண்ணம் தோன்றும் எனினும், அகப்பாட்டு
என்று கருதி அவ்வெண்ணம் தோன்றாவாறு காக்க வேண்டும். “இது காதலற்
கெடுத்த ஆதிமந்தி பாட்டு” என்று நச்சினார்க்கினியர் (தொல் பொரு. 54)
எழுதியுள்ளார். இது பெரும் பிழை யில்லையா? “காதலற் கெடுத்த” என்று
அகத்திணைப் புலவருக்கு அடையும், அகப்பாட்டிற்கு வாழ்க்கைக் குறிப்பும்
கொடுக்கலாமா? அங்ஙனம் கொடுப்பது புறத்திணைக்கன்றோ உரியது?
குறுந்தொகை தொகுத்தவரும் பதிப்பித்தவரும் பிழை செய்திலர்; “ஆதி
மந்தியார் பாட்டு” என்று முறையாகவே குறித்துள்ளனர்.

     அகச்செய்யுட்குத் திணைதுறை கூறலாமேயன்றிப் புலவன் பாடுவதற்கு
உரிய இடமும் காலமும் காரணமும் கூறலாகாது. கூறாமையை எவ்வகை
அகப்பாட்டாலும் அறியலாம். கணவனைத்தேடி அலைய எண்ணியபோதுதான்,
அலைந்தபின்னர்தான், வெள்ளிவீதியாரும் ஆதிமந்தியாரும் அகப்பாடல்களை
இயற்றினார்கள் என்பதற்குச் சான்று உண்டோ? அங்ஙனமாயின்
வெள்ளிவீதியார் கற்புப் பாடலாகவே பாடாது களவுப் பாடல்களும் ஏன்
பாடினார்? ஆதிமந்தியார் ஓர் செய்யுள் யாத்து நிறுத்துவானேன்?
காவிரியினின்று கணவனை மீளப் பெற்றபின்னர், மாண்தக்கோனைக்
கண்டேன் என்று குறிஞ்சியாக மறுசெய்யுள்யாக்காதது ஏன்? ஆதலின்
அகத்திணை கற்பாரும், ஆராய்வாரும் மறவாது பிறழாது ஒரு நெறியைப்
போற்றல் வேண்டும். பிறநூல் வாயிலாக எத்துணைச் சான்று இருப்பினும்,
இல்லா தொழியினும், அகப்பாட்டுக்கும் அதனைப் படைத்த அகப்புலவர்க்கும்
என்னானும் இயைபுபடுத்துதல், படுத்தி விளக்குதல், ஆராய்தல் ஆகாது,
முற்றும் ஆகாது. அகவிலக்கியத்தின் காதல் மாட்சி ஊறுபடல் ஆகாது.
அகப்பாவில் புவலன் தன் படைப்பாற்றலை ஆராய்க; மாந்தர்தம் பண்பியலை
ஆராய்க; அவற்றுக்குப் பிறப்பியல் உண்டோ என்று ஆராய முயலற்க.