பக்கம் எண் :

அகத்திணைக் கல்வி369

நூலின் நோக்கம்

     காலக் கூற்றுவனது கொடுவாயும், கறையானது ஈரவாயும் உண்டு செரித்த
அகப்பாடல்கள் எத்துணை, எத்துணை? தொல்காப்பியத்துக்கு முந்திய
அகப்பாக்கள் எங்கே எங்கே? சங்கத்தொகைகளில் இல்லாது
உரையாசிரியர்கள் காட்டும் அகச்செய்யுட்கள் தாமும் யாண்டு ஒளிந்தன?
இவற்றை யெல்லாம் ஆக்கிய புலவர்கள் எத்துணையரோ! எவ்வளவு
எவ்வளவோ தொலைந்த பின்னும், நற்பேற்றால் எஞ்சி வாழும்
தொல்காப்பியமும் சங்கப் பனுவல்களும் நமக்குப் பேராறுதல் அளிக்கின்றன.
மனையாளை இழந்த இளைஞன் குழந்தையைக் கண்டு ஆறுதல்
அடைகின்றான் அன்றோ? பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல்லோரால்
அகத்திணைச் செய்யுட்கள் ஆக்கப்பட்டன என்பதனால், அகக்கல்வி தமிழ்ச்
சமுதாயத்தில் நல்லுரம் பெற்றிருந்தது, நல்வளம் தந்தது என்பது வெளிப்படை.
இத்தகு கல்வி சங்கப்பிற்காலத்து மறைந்தமையால் தமிழ் நாட்டில் பல்லூறுகள்
ஏற்பட்டன. அகக்கல்வி பரவாது படியாது குறைந்தது. அகத்திணையின்
தோற்றமும் நோக்கமும் அமைப்பும் எல்லாம் விளங்காது, விளக்குவாரின்றி
மறைபட்டன. விளக்கப் புகுந்தாரும் சமயக்கல்வியாகவும் வீடுபேற்றிற்கு உரிய
இலக்கியமாகவும் அகத்திணையைத் திரித்து எழுதினர், கற்பித்தனர். அதனால்
அகத்திணை தன் உண்மையை இழந்து, மாறான பொய்யேற்றம் கொண்டது.
தமிழினமும் உலகினமும் காதற்றுறையில் புத்துயிரும் புதுவாழ்வும்
பெறவேண்டுமேல், அகத்திணைக் கல்வி தமிழகத்தும் உலகத்தும்
பரவவேண்டும்; பொய்களைந்து காதல் மெய்ம்மைகளைப் பரப்ப வேண்டும்.
இந்நோக்கத்தால் தமிழ்க் காதல் என்னும் இந்நூல் எழுந்தது.

காதற் காமம்

     தமிழ்மொழிக்கண் காதல், காமம் என்ற இருசொற்கள் உள. இவற்றின்
நேர்பொருள் என்ன? கடவுட் காதல், தெய்வக் காதல், மக்கட் காதல், மொழிக்
காதல், நாட்டுக் காதல் என்ற தொடர்களை நாம் கேட்கின்றோம்.
நல்லுறவெல்லாம் காதல் என்ற கிளவியால் மொழியப்படும். காதலந்தோழி,
தமர்பாராட்டக் காதலின் வளர்ந்த மாதர், குறவன் காதல் மடமகள், காதற்
செவிலியர், நின் காதலம் புதல்வன் எனவரும் சங்கத் தொடர்களில்
உறவுமுறைகள் காதல் வாய்பாடு படுகின்றன. “கருங்கோட்டு எருமைச்
செங்கட் புனிற்றாக் காதற்குழவி” (ஐங். 62) என்ற அடியில் அஃதிணை
உறவும் காதலாகின்றது. “பொருளை காதலர் காதல்” (அகம். 53) என்ற
தலைவி கூற்றில் தலைவனது பேராசை காதலாகத் தோன்றுகின்றது. ஆண்
பெண் காதலுறவைக் குறிக்குமிடத்து, அன்பு கேண்மை