யுடைய ஆடவன் இல்லத் தலைமையையும் உடன்கொள்வது ஒத்துவராது. மகவைப் பொறுக்கும் பெண்ணினத்துக்கே குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு உரியதும் எளியதும் நல்லதும் ஆம். ஆதலின் தலைவன் தோழி செவிலி அன்னை முதலான அகமாந்தர்கள் எல்லாரும் தலைமை நோக்கி இயங்குபவர்கள். பகற்குறி, இரவுக்குறி, வரைவு கடாவுதல், அறத்தோடு நிற்றல் ஆகிய களவுத் துறைகள் பலவும், வாயில் நேர்தல், வாயில் மறுத்தல், செலவழுங்குவித்தல், பிரிவுணர்த்தல் ஆகிய கற்புத்துறைகள் பலவும் தோழி கூற்றாக வருதலின், தலைமகள் தோழி வழிப்பட்டவள் என்று எண்ணவேண்டா. தோழி மகளின் நண்பியும் வாயிலும் ஆவாள்; அத்துணையல்லது அவளுக்கு மேல்நிலையில் நின்று யாதும் செய்யாள். அவள் மனப்போக்கெல்லாம் நாளும் பயின்று அறிபவளாதலின், உடன்படுவனவே செய்வாள். தலைவி உயிரோரன்ன கேண்மையளாயினும், அவளது களவுச் செய்கையைத் தோழி நேர்படக் கேளாள்; அவளது நாண் மிகுதிக்கும் அவள் காதலனது பெருமைக்கும் குற்றப்படாது அறிந்து கொள்ளவே முயல்வாள். தலைவன் வந்து குறையுற்றக்கால் அவன் குறையை ஏற்றுக்கொள் என்று தலைவிக்கு வெளிப்படச் சொல்லாது; குறிப்பிற் புலம்படும்படியே உணர்த்துவாள். தலைவியைப் பெரிதும்மதித்து அவள் சிறிதும் சினவாது ஒழுகுபவள் தோழி தலைவனைத் தோழி இயற்பழிக்கும் போது, தலைவி இயற்பட மொழிந்து மறுப்பதைக் காண்கின்றோம். அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு யானெவன் செய்கோ என்றி; யானது நகையென உணரே னாயின் என்னா குவைகொல் நன்னுதல் நீயே (குறுந். 96) தலைவி தோழியைச் சினந்த அரும்பாடல் இது. தலைவன் வரைவு நினைப்பின்றி வந்து களவொழுகிக் கொண்டிருந்தான். தோழியின் வரைவுக் கருத்தை அவன் மதிக்கவில்லை. அதனால் வெறுப்புற்ற தோழி ‘நான் என் செய்வது’ என்று தலைவன் மேல் கசப்புற்றாள். தலைவிக்கு சினம் அரும்பிற்று. ‘நீ சொல்வதை விளையாட்டு மொழி என்று கருதிக் கொள்கின்றேன். வேறு விதமாகக் கருதினால் உன் நிலை என்னாம்?’ என்று சொல்லி நிறுத்திக் கொண்டனள். இனி அறத்தொடு நிற்க வேண்டியதுதான் என்று தலைவி சுட்டினாலல்லது, நிற்கும் உரிமை தோழிக்கும் இல்லை என்பது தொல்காப்பிய விதி. இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென நாமறி வுறாலிற் பழியும் உண்டோ? என்று தலைவி மொழிந்த பின்னரே, தோழி அறத்தொடு நிற்றலைக் குறிஞ்சிப் பாட்டிற் கற்கின்றோம். ஆதலின் தோழி தலைவியின் நட்புத் தூதுவளேயன்றி அகத்திணைக்கண் தலைமையுடையவள் ஆகாள். கருணாகரத் தொண்டைமான் படைத் தலைமை தாங்கிப் போர்க்களம் புக்குக் கலிங்கத்தை வென்றாலும், வென்று பெற்ற |