பக்கம் எண் :

அகத்திணைத் தோற்றம்99

                            III
                    1. சமுதாய அடிப்படை

     அகத்திணை யிலக்கியத்தின் உரிப்பொருளான காதல் தமிழினம்
கொண்டொழுகிய உலகியல் நோக்கத்துக்கு முற்றும் இயைந்து என்று
மேலையாராய்ச்சியிற் கண்டோம். காதல் தன்னேரில்லா வலிய பெரிய
உணர்ச்சியே யாயினும், அஃது உருப்பெற்றும் உருப்புப்பெற்றும் ஓர்
இலக்கியப் படைப்பு எய்துதற்குத் துணைக்கூறுகள் எத்துணையோ வேண்டும்.
இக் கூறுகளும் காதலென்னும் மூலப்பொருளுக்கேற்ப உலகினவாக இருத்தல்
வேண்டும். இலக்கியம் என்பது மக்கள் வாழ்வில் கண்டவை நுகர்ந்தவை
எண்ணியவை உணர்ந்தவை தம்மைப் புலப்படுத்தும் பதிவேடு என்றும்,
மொழிவழிப்பட்ட வாழ்க்கை விளக்கம் என்றும், ஆங்கிலத் திறனாளி
அட்சனார் இலக்கிய ஆராய்ச்சி முன்னுரை நூலில் எழுதியுள்ளார்.1 இலக்கியம்
வாழ்விலிருந்து நேரடியாகத் தோன்றுவது என்றால், ஒரு தனி மனிதன்
வாழ்விலிருந்து தோன்றுவது என்றா பொருள்?


     மக்கள் பலர்கூடி வாழும் சமுதாயக் கூட்டுறவிலிருந்து இலக்கியம்
முகிழ்க்கும் என்று கொள்க. சமுதாயப் பெருங்களம் இன்றேல், மக்கட்கு
வினையாற்றலும் நாகரிகப் பாங்குகளும் தோன்றா. வேறுபட்ட எண்ணங்கள்,
வேட்கைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களெல்லாம்
சமுதாய நிலைக்கண்ணாடியிற்றான் முழுதும் காணப்படும். அரசு மதம்

ஒழுக்கப்பாடெல்லாம் சமுதாய நிலைபேற்றுக்குத் தானே வேண்டப்படுகின்றன.
ஆதலின் தமிழர் கண்ட அகவிலக்கியக் கட்டிடத்துக்கு வேண்டும்
துணைக்கூறுகளும் தமிழ்ச் சமுதாயத்திலிருந்தே கிடைத்தன என்பது என்
கருத்து. ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழினச் சமுதாய வாழ்வைச்
சங்கப்பாடல்களே காட்டுகின்றன, காட்ட வல்லன.2 இப்பாடல்களும் நான்கில்
மும் மடங்கு அகத்திணை சார்ந்தவை எனின், சமுதாயச் செய்திகள்
அகவிலக்கியப் படைப்பில் பெற்றுள்ள பேரிடம் வெளிப்படை.


                       களவு நெறி

     களவொழுக்கம் பண்டைத் தமிழகத்தில் பரவியிருந்தது. பெற்றோர்
அறியாமல் காதலர்களைத் தேடிக்கொள்ள முயன்ற இளம் பாலார்கள் அன்று
மிகப்பலர். இரவும் பகலும் களவுக்

 ____________________________________________________
     W.H. Hudson; an Introduction to the Study of Literature, p. 10.

     J.V. Chelliah; Pattuppattu: General Introduction; p.2.