தொடங்கினார். அது வளர்ந்து பல்லாயிரக் கணக்கான துறவியரையுடையதாயிற்று. பௌத்தர்கள் புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் மும்மணிகளாகப் போற்றுகின்றார்கள். தமிழ்நாட்டில் சங்கம் என்ற சொல்லுக்கு ஏற்றமளித்தவர் பௌத்தரே என்று கூறுதல் மிகையாகாது. சங்கம் நிறுவிப் பௌத்த சமயத்தை வளர்த்தார் புத்தர். அம் முறையில், பாண்டிய மன்னர்கள் தென்னாட்டில் மூன்று சங்கங்கள் நிறுவி முத்தமிழையும் வளர்த்தார்கள். பௌத்த சமயத்தில் சங்கத்திற்கு எவ்வளவு பெருமையுண்டோ, அவ்வளவு பெருமை தமிழ் நாட்டில் தமிழ்ச் சங்கத்திற்கு உண்டு. சங்கமே பௌத்த சமயத்தின் ஆணிவேர் என்பதையறிந்த சைவ சமயத்தார் அம் முறையைத் தாமும் மேற் கொண்டார்கள். சைவம் நன்றாக நிலை பெறுதற் பொருட்டும், எங்கும் பரவுதற் பொருட்டும் திருக்கூட்டம் தமிழ் நாட்டில் ஏற்படுவதாயிற்று. திருக்கூட்டம் என்பது சிவனடியார் சங்கம். சோழ நாட்டின் பழைய தலை நகராகிய திருவாரூரில் அமைந்திருந்த திருக்கூட்டத்தின் செம்மையைப் பெரியபுராணம் எடுத்துரைக்கின்றது; இருவகைப் பாசமும் அற்றவர்கள்; ஈசன் திருவடியைப் போற்றும் செல்வமே மெய்ச் செல்வமாய்க் கொண்டவர்கள். “மாசி லாத மணிதிகழ் மேனிமேல் பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள் தேசி னால்எத் திசையும் விளக்கினார் பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்” என்று அத் தொண்டர் கூட்டத்தைப் போற்றினார் சேக்கிழார். அத் திருக்கூட்டத்தைக் கண்டார் சுந்தரமூர்த்தி; |