பக்கம் எண் :

211  வல்லிக்கண்ணன்

     ஆனாலும், புதுக் கவிதை எழுத முற்பட்ட உற்சாகிகளின் பார்வை வீச்சுப் பரவலாக
உள்ளது என்று சந்தோஷப் படலாம். அவர்கள் ‘இதைத்தான் கவிதைக்குப் பொருளாகக்
கொள்ள வேண்டும்; இவை கவிதைக்கு விஷயம் ஆகா’ என்றெல்லாம் கருதவில்லை.
பார்வையிற்படுகிற அனைத்தும் கவிதைக்குப் பொருளே என அவர்கள் அங்கீகரித்திருப்பது
பாராட்டுக்கு உரியதே. ரேடியோ, வாடகை சைக்கிள், டிராபிக் சிக்னல், மனம், மரம் நிழல் -
எதுதான் கவிதைக்குப் பொருள் ஆகிக் கற்பனையைத் தூண்டவில்லை.

     நில்லாமல் நடக்கும் காதலியை நிறுத்தி வைக்கும்படி டிராபிக் சிக்னலுக்கு ‘தூது’
சொல்கிறார் ஒருவர். எல்லோருக்கும் இன்பம் தரும் வேசி ஆக அவர் வீட்டுரேடியோவை
மதிப்பிடுகிறார் இன்னொருவர்.’துறவிக் கோலத்தில் திரியும் சம்சாரிகள்’ ஆன
நரிக்குறவர்களை, விஞ்ஞானத்தின் அறைக்கூவல்கள்’ ஆகவும் ‘சோஷலிசத்தின்
புகலிடங்கள்’ ஆகவும் தரிசித்துக் கவிதை செய்கிறார் மற்றொருவர்.
 
  கர்த்தாவே!
மத்தாயு - கள்ளும் குடிக்கும் !
பெண்ணும் பிடிக்கும் !
கர்த்தர் ரட்சிக்கணம்.
ரட்சிக்கில்லேங்கில்...
மத்தாயுக்கு மயிராணு
 
இப்படிப் புத்தம் புதிய பிரார்த்தனை தீட்டுகிறார் ஒருவர்.

     புதுக்கவிதை எழுதுகிறவர்கள் இயற்கைக் காட்சிகளையும், இயற்கை நிகழ்ச்சிகளையும்
வியந்து பாடத் தவறவில்லை. மழை, பனி, மின்னல் போன்ற விஷயங்கள் திரும்பத்
திரும்பக் கவிதையாக்கப் படுகின்றன. இவ்வாறு பழைய பழைய விஷயங்களைக்
கவிதையாக்குகிறபோது புதுப்புது உருவங்களை உவமைகளை, நயங்களைக் கூற வேண்டும்
என்றும் அவர்கள் முயற்சிப்பது புலனாகிறது.

     உதாரணமாக, பனித்துளிகள் பற்றி ‘இருளின் பிரிவுக் கண்ணீர்கள்’ ‘இரவுக்கலவியின்
புல்நுனிப் பிரசவங்கள், ககனவெளிப் பிறப்புக்கள்’ காற்றுநதி வியர்வைகள், தைமாத
வருகையின் தண்டோராக்காரர்கள் என்றெல்லாம் வியந்து எழுதுகிறார் ஒருவர்.

     இன்னொருவர், இரவியின் வருகைக்கு இறைத்த முத்துக்கள், இரவியின் உமிழ்நீர்,
உறங்கும் அரும்பின் வியர்வை நீர், அரும்பு நாசிக்கு தேவன் அணிவித்த மூக்குத்தி, கான
மகளுக்குப் போகும் நாள் விலக்கு, வான உறவுக்குப் பிறந்த ஊமைச் சிறுவிளக்கு என்றும்,
இன்னும் விதம் விதமாகவும் பனித்துளிகளைக் கண்டு மகிழ்கிறார்.

     இவ்விதம் உற்சாகத்தோடு எப்பவாவது ஒன்றிரண்டு தனிக்கவிதைகள் எழுதிவிட்டு
திருப்தியோடு ஒதுங்கிப் போகிறவர்கள், எப்படியும் எழுதி முன்னேற முயல்வது என்ற
தீர்மானத்தோடு எழுதுகிறவர்கள் எண்ணிக்கை எழுபதுகளின் ஆரம்பவருடங்களில்
அதிகம்தான். இதை இலக்கியப் பத்திரிக்கைகளின், பக்கங்கள் நிரூபிக்கின்றன.