ஈழத்துப் புதுக்கவிதைகளிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். யாப்பு முறிவு, சொற் செறிவு, கருத்து முதன்மை முதலியன மட்டுமின்றி, படிமம் குறியீடு ஆகியவற்றையும் கொண்டமையும்போது தான் புதுக்கவிதை என்பது முழுமை எய்துகின்றது. தமிழ்நாட்டுப் புதுக்கவிதை வளர்ச்சியில் இத்தகைய பண்பு ‘எழுத்து’ சஞ்சிகை வெளிவந்த பின்புதான் இடம்பெறத் தொடங்கியது. ஆயினும். புதுக்கவிதையின் இத்தனித்துவப் பண்பு சிலசமயம் மிகுதியாக இடம்பெற்று, புதுக்கவிதை சிறப்பிழக்க வழிவகுக்கின்றது. ஈழத்துப் புதுக்கவிதைகளில் இத்தகைய பண்பு இடம்பெறல்-படிமம், குறியீடு அமைதல் -குறைவாகும். தமிழக புதுக்கவிதைக்கும் ஈழத்துப் புதுக்கவிதைக்குமிடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுள் இது முக்கியமானது. ஆயின், படிமம் குறியீடு என்பனவற்றுக்குப் பதிலாக வேறு சில பண்புகள் ஈழத்துப் புதுக்கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றுளொன்று, பேச்சு வழக்குச் சொற்கள், சொற்றொடர்கள், பேச்சோசைப் பண்பு முதலியன அமைவதாகும். கவிதையில் அடுக்கடுக்காக உவம, உருவகத்தொடர்கள் அதிகம் இடம் பெறுகிறபோது எளிதில் விளங்கிக்கொள்ளத் தடை ஏற்படுகின்றது. பேச்சு வழக்குச் சொற்கள், பேச்சோசைப் பண்பு சேர்கிற கவிதைமிக எளிதான தன்மை உடையதாக இருக்கிறது. இவ்வாறு படிமம், குறியீடு முதலியன இடம் பெறாமலும் பேச்சு வழக்குச் சொற்கள் - சொற்றொடர்கள்-பேச்சமைதி, எளிமை முதலியன இடம் பெறுவதாலும் ஏற்படும் பயன் விதந்துரைக்கத்தக்க ஒன்றாகிறது. குறியீடு, படிமம், உவம, உருவகத்தொடர்கள் மிகுதியாக இடம் பெறுவதனால், தெளிவின்மை ஏற்படுவதோடு, புதுக்கவிதை வளர்ச்சிக்கும் அது குந்தகமாகின்றது. எவ்வாறு மரபு வழிக் கவிதைகளில் கருத்துக்களை வெளிப்படுத்த சில சமயம் யாப்புத் தடையாக இருக்கிறது என்று கூறப்படுகிறதோ, அவ்வாறே புதுக்கவிதைகளில் மேற்கூறிய இயல்புகளினால், கருத்திலே விளங்கிக் கொள்ள முடியாத நிலை உருவாகும். உருவாகவே மரபு வழிக் கவிதையிலிருந்து புதுக்கவிதை கிளைத்தது போல, புதுக்கவிதையிலிருந்து பிறிதொரு வகைக் கவிதை உருவாதல் சாத்தியமாகலாம். அது மட்டுமன்று, புதுக்கவிதையின் பயன்பாடும் இதனால் குன்றுகிறது. சமுதாயக் குறைபாடுகளைக் களையவோ, சமுதாய மாற்றுக்கான கருத்துக்களைச் சாதாரண மக்களுக்குப் புரிய வைக்கவோ இயலாது போகலாம். ஆனால், ஈழத்துப் புதுக்கவிதையில் காணப்படும் மேற்குறித்த இயல்புகள்-படிமம், குறியீடு குறைவாகக் காணப்படுதல். பேச்சு வழக்குச் சொற்கள். சொற்றொடர்கள், பேச்சோசைப் பண்பு அமைதல், எளிமை - தொடர்ந்தும் (பழமொழிகள், நாட்டுப் பாடல் தன்மைகள் முதலியனவற்றோடு) நன்முறையில் விருத்தியுறுமாயின், எதிர்க்காலத்தில் புதுக்கவிதை பயனுடையதாகச் செழித்து வளர, அதிக வாய்ப்பு இருக்கிறது”. | | |
|
|