பக்கம் எண் :

106நாமக்கல் கவிஞர்

  
  பக்தி, சத்தியம், தியாகம்-இவற்றின்
     பண்பே வாழ்க்கையின் யூகம்
நித்தம் நித்தமிந்த நீதி-தம்மை
     நீட்டும் இக்கொடியின் ஜோதி.
(கொடி)
 
ஜாதிபேத மதம் இல்லை-மற்றும்
     சமய பேதமதில் இல்லை
நீதி யானபல முறைகள்-நமக்கு
     நிலைய மாகும் அதன் குறிகள்.
(கொடி)
 
என்ன புதுமையிது பாரும்-கொடி
     ஏதிது போலென்று கூறும்
அன்னைக் கொடியிதனைப் பாடி-அதன்
     அடியில் நின்றுபுகழ் கூடி.
(கொடி)
 
ஏழை எளியவர்கள் யார்க்கும்-பயம்
     இல்லை யென்ன அறம் காக்கும்
வாழி நமதுகொடி வாழி-புது
     வாழ்வு தந்தினிது ஊழி.
(கொடி)

வாழிய கொடியே!
 

பல்லவி

  கொடியைக் கும்பிடுவோம்-நம்முடை நாட்டின்
கொடியைக் கும்பிடுவோம்.
 
 


சரணம்

 
  எந்தக் கடவுளை எவர்தொழு தாலும்
எத்தனை வேற்றுமை நமக்கிருந்தாலும்
இந்தியர்க் கெல்லாம் பொதுவாம் தெய்வம்
இந்தக் கொடியே இதிலென்ன ஐயம்,
(கொடி)