| கஞ்சியின்றி உயிர்தளர்ந்த ஏழை மக்கள் காலில்வந்து விழுவதையே களிப்பாய் எண்ணி பஞ்சணையில் படுத்திருந்தபடியே இந்தப் பாரளிக்கும் மன்னவர்கள் பலரைப் பார்த்தோம் தஞ்சமின்றித் தரித்திரத்தின் கொடுமை வாட்டத் தவித்துழலும் பலகோடி மக்கட் கெல்லாம் அஞ்சலென்ற மொழிகொணர்ந்து ஆண்மை யூட்டும் அன்புருவாம் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. ஆயுதத்தின் அதிகாரம் அதற்கே அஞ்சி அடிபரவும் பலபேர்கள் அருகே சூழப் பேயுதித்துக் கொலுவிருக்கும் பெற்றியே போல் பிறர்நடுங்க அரசாண்டார் பலபேர் உண்டு போயுதித்த இடங்களெல்லாம் புதுமை பூட்டி புதையல்வந்து கிடைத்தது போல் பூரிப் பெய்தித் தாயெதிர்ந்த குழந்தைகள் போல் ஜனங்கள் பார்க்கத் தாவிவரும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. ஏழைகளின் குடிமுழுக வரிகள் வாங்கி இந்திரியச் சொந்தசுகங் களுக்கே வீசிக் கோழையராய்ப் பிறர்உழைப்பில் கோலங் கொள்ளும் கோமான்கள் குவலயத்தில் பலபேர் உண்டு வாழையைப் போல் பிறர்க்குதவி வருத்தம் தாங்கி வறியவர்க்கே கனிந்துருகும் வரிசைக்காக வாழிஜவார் வாழிஜவார் வாழியென்று வாழ்த்திசைக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலாம். | | |
|
|