பக்கம் எண் :

தமிழன் இதயம்65

  
   ‘வேண்டும்’என்ற உறுதியே
     விடுதலைக்கு வழிவிடும்!
யாண்டிருந்து வருவது?
     யார்கொடுத்துப் பெறுவது?
 
 
 ‘அடிமையல்லன் நான்’ எனும்
     ஆண்மையே சுதந்தரம்
தடியெடுக்க வேண்டுமோ?
     சண்டையிட்டு வருவதோ?
 
 
ஆசைவிட்ட பொழுதிலே
     அடிமை வாழ்வும் விட்டிடும்;
மீசை துள்ளி வாயினால்
     மிரட்டினால் கிடைப்பதோ?
 
 
அஞ்சுகின்ற தற்றபோது
     அடிமையற்றுப் போகுமே;
நஞ்சுகொண்டு யாரையும்
     நலிவுசெய்து தீருமோ?
 
 
நத்தி வாழ்வ தில்லையென்ற
     நாளிலே சுதந்தரம்;
கத்தி கொண்டு யாரையும்
     குத்தினாற் கிடைக்குமோ?
 
 
கள்ளமற்ற நேரமே
     காணலாம் சுதந்தரம்;
உள்ளிருக்கும் ஒன்றை வேறு
     ஊரிலார் கொடுப்பவர்?
 
 
தீமையோடு உறவுவிட்ட
     திண்மையே சுதந்தரம்
வாய்மையோ(டு) உறவறாத
     வன்மையே சுதந்தரம்.