| பலப்பலவாம் தீர்மானம் படிக்க வேண்டா பகட்டாகப் பேசிமட்டும் பயன் வராது உலகினுக்கு வேண்டியது ஒன்றே ஒன்று உத்தமனார் காந்திவழி உபதேசம் தான் கலகமின்றி மனிதரெல்லாம் கலந்து வாழக் கருணைவழி காட்டஒரு கட்சி வேண்டும் இலகுமிந்தத் திருப்பணியை உலகுக் காற்ற இந்தியரே மிகமிகவும் ஏற்றமாவர். | |
| வானிருந்து ஒருதேவன் வலிய வந்து வகைகெட்ட மனிதருக்கு வழியைக் காட்டி தானிருந்து நமக்காகத் தவங்களாற்றித் தருக்கான தூஷணைகள் பலவுந் தாங்கி மோனநெறி தவறாத காந்தி யாக முன்னிருந்து காரியங்கள் முயலும்போது ஏனிருந்து நாம்பலவும் எண்ணவேண்டும் என்னசொன்னார் காந்தியதைப் பண்ணுவோமே. | |
| காந்தியர்க்குக் கைபோல உதவி நின்று கடல் கடந்த ஆப்ரிக்கா கண்டம் தொட்டுச் சேர்ந்திருக்கப் பாடுபட்டு ஜெயமும் பெற்ற சிறப்பெல்லாம் தமிழருக்கே மிகவும் சேரும் நேர்ந்திருக்கும் நெருக்கடியை வெல்ல இன்றும் தமிழர் துணை காந்தியவர் நினைப்பார் உண்மை சோர்ந்துவிடக் கூடாது தமிழா! காந்தி சொன்னபடி செய்வதுதான் உன்றன் ஜோலி. | |