பக்கம் எண் :

100சாமி சிதம்பரனார்

New Page 1

ஒரு சடங்காக வைத்திருக்கின்றனர். கல்யாணத்திலே அரசாணிக்காலாக
இருந்த ஒதியமரத்தை நட்டுப் பயிர் செய்வது வழக்கம். ஒவ்வொரு மனிதனும்
தன் ஆயுள் காலத்திலே பால் தரும் ஐந்து மரங்களையாவது நட்டுப் பயிர்
செய்யவேண்டும் என்பதை முன்னோர்கள் ஒரு கடமையாகக்
கொண்டிருந்தனர். நாட்டிலே மழை வளம் குறையாமலிருப்பதற்கே இந்த
ஏற்பாடு.

நாடு நன்றாக வாழ-நாட்டிலே நீர்வளம் குறையாமலிருக்க-உணவுப்
பொருள் உற்பத்தி பெருக-என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும்
என்பதைச் சிறுபஞ்சமூல ஆசிரியர் தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
 

  ‘‘குளம்தொட்டுக் கோடு பதித்து, வழிசீத்து,
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்,
பாகுபடும் கிணற்றோடு, என்றுஇவ் ஐம்பால் படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது.
 

தண்ணீர்த் தட்டு ஏற்படாமல் இருப்பதற்காகப் பெரிய ஆழமான குளம்
தோண்டவேண்டும்; தளிர்த்து வளரக் கூடிய மரக்கிளைகளை நிலத்திலே
நட்டு நீர்விட்டு வளர்க்க வேண்டும்; மக்கள் நடப்பதற்கான வழிகளை
முட்புதர்களோ மேடுபள்ளங்களோ இல்லாமல் நன்றாகச் செப்பனிட்டு
வைக்கவேண்டும்; தரிசு நிலத்தை வெட்டிப் பண்படுத்தி உழுது பயிர்
செய்யத்தக்க நன்செய் நிலமாக்குவதோடு நன்றாக விளையும்படி செழிப்புள்ள
நிலமாக்க வேண்டும்; சுற்றிலும் கரை கட்டப்பட்ட கிணறுகளையும் தோண்ட
வேண்டும். இந்த ஐந்து பகுதிகளையும் செய்தவனே இனிய சுவர்க்கத்தை
அடைவான்’’. (பா.66)

இவ்வெண்பாவிலே சொல்லியிருக்கும் ஐந்து செய்திகளும் என்றும்
போற்றத்தக்கவை. இதைப் பின்பற்றி நடக்கும் நாட்டிலே பஞ்சம் ஏற்படாது.