பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
116

16

16. 'ஐ ஒள' 'அய் அவ்' தானா?

    'ஐ ஒள' வரிவடிவுகள் முன்போன்றே யிருக்கலாமென்று திருவள்ளுவர் விழா முடிப்புரையில், தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு     ம. கோ. இராமச்சந்திரனார் என்னும் அழகமதியர் குடியரசு முறைக்கேற்ப முடிபு கூறியது, தமிழுலகம் அனைத்தும் மகிழ்ச்சியொடும் நன்றியறிவொடும் பாராட்டத் தக்கதாகும். இனி அதுபற்றிக் கவல எள்ளளவும் இடமில்லை.

    ஆயின், தமிழ் உலகமுதல் உயர்தனிச் செம்மொழியென்று, கால் நூற்றாண்டாகச் சொல்லியும் எழுதியும் விளக்கியும் வரினும், தமிழின் தொன்மை முன்மைகளைப் புலவர் சிலர் இன்னும் அறியாது, பேரனே பாட்டனுக்குமுன் பிறந்தான் என்பது போன்று, வடமொழியினின்றே தமிழுக்கு ஐகார ஒளகாரங்கள் வந்தன என்று சொல்வதனாலும், அதுகண்டு மாணவர் பலர் மயங்குவதனாலும், அம் மயக்கறுக்கவே இதனையும் இனிவரும் நாற்கட்டுரைகளையும் விடாது எழுதத் துணிந்தேன்.

    திரவிட ஒப்பியல் இலக்கணம் ஆய்ந்தெழுதிய கால்டுவெலாரே, தமிழ் நெடுங்கணக்கு வடமொழியைப் பின்பற்றியதென்று கூறியிருக் கின்றாரே யென்று, சிலர் வினவலாம். அவர் தமிழாய்ந்த கால நிலைமை களை நோக்கினால், அவர் அங்ஙனங் கூறியதற்குக் காரணம் தெளிவாகப் புலனாகும்.

    அந் நிலைமைகளாவன:

      1. தொல்காப்பியமும் பதினெண் மேற்கணக்கும் சிலப்பதிகாரமும்
தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்து கிடந்தமை.
   
      2. மறைமலையடிகள் போன்ற வழிகாட்டி எவருமின்றி அவர்
தன்னந் தனிமையாகத் தமிழாய்ந்தமை.
   
      3. அரசியல் துறையிலோ, குமுகாயத் துறையிலோ, இலக்கியத்
துறையிலோ, மொழித் துறையிலோ, தமிழரிடை இன்றிருக்கும்
விழிப்பு அக்காலத் தில்லாதிருந்தமை.
   
      4. எல்லா வகையிலும் தமிழர் ஆரியர்க்கு முற்றும் அடிமைப்
பட்டிருந்தமையும், தென்சொற்கு வடசொன் மூலங்காட்டுவதிற்
பெருமை கொண்டமையும்.