பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
59

New Page 1
     மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்

(தொல். 104)

   
     குற்றிய லுகரமும் அற்றென மொழிப

(தொல். 105)

என்று மாட்டேற்றிக் கூறினார்.

    இம் மாட்டேற்றைக் கவனியாது, "குற்றிய....மொழிப," என்னும் நூற்பாவிற்கு "ஈற்றிற் குற்றிய லுகரமும் (புள்ளியீறு போல உயிரேற இடம் கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவர்" என்று இளம்பூரணரும், "ஈற்றுக் குற்றியலுகரமும், புள்ளியீறு போல உயிரேற இடம் கொடுக்கு மென்று கூறுவர் புலவர்" என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவது பொருந்தாது. "அற்றென மொழிப" என்னும் மாட்டேறு, "புள்ளியொடு நிலையல்" என்பதையே தழுவுமாதலின் இவ் விருவரும் இங்ஙனம் உரைத்தற்கு இவர் காலத்திற்கு முன்பே குற்றியலுகரம் புள்ளி பெறும் வழக்கம் வீழ்ந்தமையே காரணமாகும். இவர் கூறிய உரை இங்குப் பொருந்துமாயின் தொல்காப்பியர் நூன்மரபில்,

     மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்

(தொல். 15)

   
     எகர ஒகரத் தியற்கையும் அற்றே

(தொல். 16)

என்று கூறியவிடத்தும் பொருந்தல் வேண்டும்.

    எகர ஒகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுத்த லின்மை யானும், "எகர... அற்றே" என்னும் நூற்பாவிற்கு, "எகர ஒகரங்களது இயல்பும் அவ்வாறு புள்ளி பெறும் இயல்பிற்று" என்று இளம்பூரணரும், "எகர ஒகரங்களின நிலையும் மெய்போலப் புள்ளி பெறும் இயல்பிற்று" என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவதானும், "குற்றிய... மொழிப" என்னும் நூற்பாவிற்கும் குற்றுகரமும் மெய்போலப் புள்ளிபெறும் என்பதே உரையாகக் கோடல் பொருத்தமாம்.

    இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கு மென்று உரைத்தவிடத்தும், மாத்திரைக் குறுக்கத்தால் அங்ஙனம் இடங்கொடுக்கும் என்னும் கருத்தினரே அன்றி மெய்யீறாய் இருத்தலால் இடங்கொடுக்கும் என்னுங் கருத்தினரல்லர். "குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடிய அரை மாத்திரையாய் நிற்றலும், முற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடியாமையும் தம்முள் வேற்றுமை" (தொல். 36, உரை) என்று நச்சினார்க் கினியர் கூறுதல் காண்க.

    இனி, தொல்காப்பியர் கருத்தை நோக்கின், அவர் குற்றியலுகரத்தை மெய்யீறென்று கொண்டார் என்று கொள்ளுதற்கு எள்ளளவும் இடமில்லை. அவர்,

     குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்  
   
     ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்

(தொல். 67)