பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
66

New Page 1
     முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ  
     தப்பெயர் மருங்கின் நிலையிய லான

(எழுத். 68)

என்று அதற்கு விலக்குங் கூறியுள்ளார்.

    இந் நூற்பாவுக்கு,

    "காது, கட்டு, கத்து, முருக்கு, தெருட்டு என்பன முற்றுகரமுங் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல, நுந்தையென்று, இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறிய விடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தா யென்பதோவெனின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான், இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க. இதனானே மொழிக்கு முதலா மெழுத்துத் தொண்ணூற்று நான்கென்று உணர்க," என்பது நச்சினார்க்கினியர் விளக்கவுரை. இளம்பூரணர் கருத்தும் இதே.

    காது, கட்டு, கத்து முதலியன ஏவல் வினையும் தொழிற்பெயருமாய்ப் பொருள் வேறுபடுவது, முற்றுகர குற்றுகர வேறுபாட்டினாலன்று; ஒலியழுத்த ] இடவேறுபாட்டினாலேயே. ஏவல் வினையாய் நிற்கும்பொழுது ஈற்றசையிலும், தொழிற்பெயராய் நிற்கும்பொழுது முதலசையிலும், ஒலியழுத்தம் விழும். 'இதைக் கட்டு' என்று ஏவல் வினையாய் ஆளும் பொழுது டுகரத்தின் மேலும், 'கட்டுக் கட்டாய்க் கட்டினான்' என்று வினைப் பெயராய் ஆளும்பொழுது ககரத்தின் மேலும், ஒலியழுத்தம் விழும். ஒலியழுத்தத்தினால் குற்றியலுகரம் இதழ் குவிந்தொலிக்கும் முற்றுகரமாகி விடாது. இதை ஒலித்துக் காண்க.

    "நுந்தாய் என்பதோவெனின், அஃது இதழ் குவித்தே கூற வேண்டுதலிற் குற்றுகரமன்று" என்பது, நுந்தை என்பதும் அத்தகையதே யென்னும் கொள்கைக்கு ஒருவாறு துணைபுரிதல் காண்க.

    நன்னூலார் குற்றியலுகர வியல்பைத் தொல்காப்பியரினும் நன்குணர்ந்தவராதலின், அதை மொழிமுதலெழுத்துகளுள் ஒன்றாகக் கொண்டிலர்.

நன்னூலுரையாசிரியர் மயிலைநாதர்."குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்" என, ஆசிரியர் தொல் காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாமென்றாராலோ வெனின்,

     நுந்தை யுகரங் குறுகி மொழிமுதற்கண்
     வந்த தெனினுயிர்மெய் யாமனைத்தும் - சந்திக்
     குயிர்முதலா வந்தணையும் மெய்ப்புணர்ச்சி யின்றி
     மயலணையும் என்றதனை மாற்று