பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
7

2

2. இலக்கணவுரை வழுக்கள்

1. ஒற்றளபெடை

    "ஙஞண நமன" என்னும் நன்னூற் சூத்திரத்திற்கு,

    சூத்திரத்துக் கூறப்பட்ட பத்தொற்றும் ஆய்தம் ஒன்றுமாகப் பதினோ ரெழுத்தும், குறிற்கீழிடை, குறிற்கீழ்க்கடை, குறிலிணைக் கீழிடை, குறிலிணைக் கீழ்க்கடை என்னும் நான்கிடத்தும் அளபெடுக்க ஒற்றள பெடை மொத்தம் நாற்பத்து நான்காம். அவற்றுள் ஆய்தமானது இயல்பீறாக வேனும் விதியீறாகவேனும் சொல்லுக் கீற்றில் வாராமையால் குறிற் கீழ்க்கடை குறிலிணைக் கீழ்க்கடை என்னும் இரண்டிடத்தையுங் கழிக்க ஒற்றளபெடை நாற்பத்திரண்டாதல் காண்க என்றே முன்னைப் பின்னை உரையாசிரிய ரெல்லாம் உரைத்தார்.

    குற்றியலுகரம் குறிற்கீழன்றிக் குறிலிணைக்கீழ் வாராதென்பது,

     குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
     உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே

என்னும் சூத்திரத்தாற் றெளிவாம். அதன் உரையிலும், 

     விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாத
     ரிலஃஃகு முத்தி னினம்

என இவ்வாறு குறிலிணைக் கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய் நிற்பனவல்ல. ஓசை நிறைத்தற்பொருட்டு ஒற்றில்வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும் ஒற்றாய் வருமெனக் கொள்க" என்றார் மயிலைநாதர். ஆகவே குறிலிணைக்கீழ் ஆய்தம் வாராதென்பது பெறப்பட்டது.

    இனி, அல் + திணை = அஃறிணை, முள் + தீது = முஃடீது, அவ் + கடிய = அஃகடிய என விதியீறாய் ஆய்தம் வருதலின் ஈற்றில் வாரா தென்பதும் போலி யுரையென மறுக்கப்படும். ஆகவே, ஆய்தம் குறிற் கீழிடை குறிற்கீழ்க்கடை என்னும் ஈரிடத்தும் வந்து அளபெழும் என்றும், குறிலிணைக் கீழிடை குறிலிணைக் கீழ்க்கடை என்னு மீரிடத்தும் வாரா தென்றும், அவ் விரண்டிடத்தையுமே கழிக்க ஒற்றளபெடை மொத்தம் நாற்பத்திரண்டாம் என்றும் கண்டுகொள்க.