12
12. தமிழெழுத்துத் தோற்றம்
எம்மொழியாயினும், மொழி முந்தியதும்
எழுத்துப் பிந்தியதுமாகு மென்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாம். தமிழ் உலக முதற்றா யுயர்தனிச்
செம்மொழியாதலின், அதன் வரி வடிவெழுத்து பிற மொழிகளில் எழுத்துத் தோன்று முன்னரே தோன்றிய
தென்பது சொல்லாமலேயே பெறப்படும். ஆயினும், ஒற்றுமையின்றி இடச் சார்பிலும் குலச்சார்பிலும்
ஆங்காங்குத் தோன்றியுள்ள பல்குழுவும், பல்வகைப் பாழ்செய்யும் உட்பகையும், தொன்றுதொட்டுத்
தமிழுக்கும் தமிழனுக்கும் கட்டுப்பாடாகக் கேடு செய்துவரும் கொல்குறும்பும் இருந்துவருவதால்
வெள்ளிடை மலையாக வெளிப்பட்டவுண்மைகளையும் மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்க வேண்டியுள்ளது.
தலைக்கழகம் குமரிநாட்டுப் பஃறுளியாற்றங்
கரைத் தொன் மதுரையில் கி.மு. தோரா. 10000 ஆண்டுகட்கு முன் தோன்றி, முத்தமிழும் பிற
பலகலையறிவியல் துறைகளும் பற்றிய முந்து நூல்களை ஆய்ந்தும் புது நூல்களை இயற்றியும், தமிழை வளர்த்து
வந்தமையால், அதற்கும் முன்பே எழுத்துத் தோன்றியிருத்தல் வேண்டும் என்பதற்குச் சான்று வேண்டுவ
தில்லை.
"எழுதப்படுதலின் எழுத்தா
கும்மே" (முத்துவீரியம், 1) ஒலியன் (phoneme) என்னும் மொழித் தனியொலி எழுத்தென்றே பெயர்
பெற்றிருப்பதால் தலைக்கழகக் காலத்திற்கு முன்பே தமிழ் எழுதப்பட்ட மொழியா யிருந்தமை அறியப்படும்.
ஒலிவடிவு, வரிவடிவு என எழுத்தின்
இருவடிவும் பிரித்துக் கூறப்படினும், எழுத்து என்னும் பெயர் ஒலிவடிவையே சிறப்பாகக் குறிக்குமென்பதை,
எழுத்தெனப் படுப |
அகரமுதல் னகர இறுவாய் |
முப்பஃ தென்ப |
"சார்ந்துவரல் மரபின் மூன்றலங்
கடையே" (1) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் உணர்ந்துகொள்க.
|