| முன்னேறும் வழியே முத்தமிழ் மொழியே |
| இன்னேகண் விழியே எத்துகை ஒழியே. |
| முத்தமிழ வேந்தரும் முன்மொழியில் ஒன்றி நின்றனர் |
| மற்றவர் இந்நாடு கொள்ள வழியில்லாது சென்றனர் |
| அந்நாளிங் காரியம் ஐயம் புகுந்ததே |
| விண்ணோர் மொழியென வெய்யபொய் தந்ததே |
| தாய்மொழியைத் தாழ்ந்ததென்று தமிழவேந்தர் தள்ளவும் |
| வாய்மொழியில் வழிபடற்கே வடமொழியைக் கொள்ளவும் |
| மூன்றாங் கழகமே முற்றும் ஒழிந்தது |
| மூவேந்த ரும்பின்னே முட்டி யழிந்தனர் |
| வள்ளுவர்கோள் நூலிழந்து வறிய வாழ்வை யுற்றனர் |
| தெள்ளுதமிழ்ப் பாணரும்பின் தீண்டுநிலைமை யற்றனர். |