முற்செலுத்தலையும்
துளைத்தலையும் குறித்தல் காண்க. துரப்பணம் =
துளையிடுகருவி (auger).
துரவு = துளைக்கப்பட்ட கேணி, துருவியாராய்தல் (spying),
தூது. துர- தூரி = தள்ளியாடும் ஊஞ்சல். தூண்டு =
முன்னாற் செலுத்து, திரியைத் தள், ஏவு, "தூண்டிய
வேகத் துரகதத் தடந்தேர்" (பாரதம்). துர-துரகம் -
துரங்கம் = வேகமாய்ச் செலுத்தப்படும் குதிரை.
துரந்தரம் = பொதியெருது, பொறுப்பு. துரந்தரன் =
செலுத்துவோன், வெற்றியாளன், முயற்சியாளன்,
பொறுப்பாளி. துரை = தலைவன், அரசன். தூண்டு - தீண்டு =
திரியைத் தள்.
துரை - துனை= விரைவு. "கதழ்வுந்
துனைவும் விரைவின் பொருள" (தொல். 799).
தூது = (1) முன்னால் விடுக்கும் செய்தி (message).
(2) செய்தி கொண்டுபோகிறவன் (messenger).
(3) அரசச் செய்தி
கொண்டுபோகிறவன் (ambassador).
துள் - துன் (துன்னு) = முற்செலுத்து, உழு, தை,
தள், பொருந்து. துன்னூசி = உழவூசி (கொழு), கொழுச்
சேர்ந்த கலப்பைமூக்கு, ஊசி. துன்னல் = உழுதல்,
தைத்தல். துன்னப் போத்து = உழவெருமை. துன்னு =
ஊசியை முற்செலுத்தித் தை. துன்னம் = தையல். இனி,
உழு = உள்ளே கீறு; துன்னு = துளைத்துக் கீறு அல்லது தை
என்றுமாம். துள் = சேர், திரள்.
துள் - தள் - தண்டு - தண்டி - தண்டம் -
தண்டனை. தண்டி - தடி - தாட்டி. தடி - தடம் - தடவு. E.
doughty.
துள் - துல். துல்லல் = பொருந்தல்,
ஒத்தல். துல்லியம் - துல்லிபம் = ஒப்பு, ஒத்த அளவு,
அளவு. துல் + ஆ - துலா - துலை = ஒப்பு, இருபுறமும் ஒத்த
அளவிடும் தராசு, தராசு போன்ற ஏற்றம். ’ஆ’ ஒரு
தொழிற்பெயர் விகுதி. எ - டு: உண் + ஆ = உணா, பிண் +
ஆ - பிணா, நில (ஒளிர்) + ஆ - நிலா, இரு (கரு) + ஆ - இரா,
விழு(விரும்பு)+ ஆ - விழா. துலா + கோல் - துலாக்கோல்.
துலா - துலாம் -துலான் = பெருந்தராசு, ஒரு நிறை. துலாம்,
துலாக்கோல், கைத்துலா, ஆளேறுந் துலா என்னும்
பெயர்களும் அவை குறிக்கும் பொருள்களும்
தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கிவருபவை.
"துலைநா வன்ன சமநிலை யுளப்பட" (தொல்.
பொதுப்பாயிரம்.) துல் (நிறு) < தோல் (இ.). துள் -
துளை - துணை = ஒப்பு, அளவு. துணை - தனை. அத்துணை -
அத்தனை.
துல் - துன் = முன்னுக்குத் தள், பொருந்து.
துன்னார் = பொருந்தார், பகைவர். துன் - துன்று =
பொருந்து, நெருங்கு, நிறை. துல் - துறு = பொருந்து,
நெருங்கு, சேர். துறு - துறை.
துள் - துண் = பொருந்து, சேர். துணை =
சேர்ந்தது, இரண்டு. துண் - துணர் - துணரி = பல பூக்கள்
சேர்ந்த கொத்து.
துள் - தொள் - தொழு = பொருந்து, கூடு.
தொழு < தொகு. தொழுதி = தொகுதி, கூட்டம். தொகு -
தொகை. தொகுப்பு - தோப்பு. E.
tope. தொழு - தொறு = கூட்டம்,
பசுக்கூட்டம். தொறு - தோறு = கூட, உடன் (ஓர்
இடைச்சொல்). தொறு + உம் - தொறும்.
|