"பேநாம் உரும்என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள"
(849)
எனத் தொல்காப்பியத்திலும்,
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடை"
என அதன் சிறப்புப் பாயிரத்திலும் நெடுஞ்சுட்டு
வந்திருத்தல் காண்க.
"மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
ஆமருந்து போல்வாரு முண்டு"
என்றார் ஒளவையாரும்.
(3) தமிழொழிந்த திரவிட மொழிகளில்
சுட்டும் வினாவும் இன்றும் நீண்டு வழங்கல்.
’ஆ(ய்) ஆள்’, ’ஈ மூரி’ என்று மலையாளத்திலும்,
’ஆ பனி’, ’ஏ(வ்) வூர்’ என்று தெலுங்கிலும், இன்றும் முதற்
புறச்சுட்டும் வினாவும் நீண்டு வழங்குகின்றன. இது
குடியேற்றப் பாதுகாப்பு (Colonial
Preservation) ஆகும்.
(4) வடமொழியில் எகர ஒகரமின்மை
குமரிநாட்டிலிருந்து பலமுறை மக்கள்
உலகத்தின் நாலாபக்கமும், சிறப்பாக வடக்கு நோக்கி,
பிரிந்து போனார்கள். தமிழில் ஏகாரமும் ஓகாரமும்
குறுகுமுன் பிரிந்து போனவர்கள் சமற்கிருத ஆரியர்
என்னும் கூட்டத்தார். அவர்கள் மொழியில் ஏகார
ஓகாரங்கள் நெடிலாயே நின்றுவிட்டன.
(5) பண்டைத் தமிழில் எகர ஒகரம்
புள்ளி பெற்றமை
பொதுவாகக் குறில்வரிகள் குறைந்தும் நெடில்வரிகள்
மிகுந்தும் இருப்பதே இயல்பு. இவ் வியல்பின்படியே
ஏனை யுயிர்வரிகளெல்லா மிருக்கின்றன. ஆனால், எகர
ஒகரமட்டும் தத்தம் நெடிலினும் தாமே வரிமிக்கிருந்திருக்கின்றன.
இதற்குக் காரணம் ஏகார ஓகாரங்களே தொன்றுதொட்டு
அவற்றின் குறில்கள் இடைப்பட்டும் வழங்கினமையாகும்.
இடைப்பட்ட குறில்களைப் பிரித்துக்காட்டவே. பண்டை
ஏகார ஓகார வரிகளின்மேல் புள்ளிகளை யிட்டிருக்கிறார்கள்.
அப்போது அவ் வரிகளின்கீழ் இப்போதுள்ள இழுப்பும்
சுழியும் இல்லை. இற்றை எகர ஒகர வரிகளே அற்றை ஏகார
ஓகார வரிகளா யிருந்தன. பிற்காலத்தில் இம் முறை
தகாதென்று கண்டு, எகர ஒகரங்கட்குப் புள்ளி நீக்கி
அவற்றின் நெடில்கட்குக் கீழிழுத்தும் கீழ்ச்சுழித்தும்
வரியமைத்ததாகத் தெரிகின்றது.
(6) தொன்முது வேர்ச்சொற்களெல்லாம்
நெடிலாயே யிருத்தல்.
எடுத்துக்காட்டு: வா, போ, ஏழ், வீழ்.
(7) ஆண்டு ஈண்டு என்னும் சுட்டுச் சொற்கட்குக்
குறின்முதல் வடிவமின்மை
|