வைகுதொழில் மடியும் மடியா விழவின் யாணர் நன்னாட் டுள்ளும் பாணர் பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக் கோழி யோனே கோப்பெருஞ் சோழன்." (புறம். 212) "பெருவிறல் யாணர்த் தாகி யரிநர் கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர் கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை நீர்தரு மகளிர் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந." (புறம். 42) "மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டுக் குறுமுயலின் குழைச்சூட்டோடு நெடுவாளைப் பல்லுவியற் பழஞ்சோற்றுப் புகவருந்திப் புதற்றளவின் பூச்சூடி .........அரியலாருந்து." (புறம். 395) இத்தகைய காட்சிகளைக் கருத்திற்கொண்டே, கம்பரும், "துள்ளிமீன் துடிப்ப வாமை தலைபுடை சுரிப்பத் தூம்பின் உள்வரால் ஒளிப்ப மள்ளர் உழுபக டுரப்பு வாரும்." (கம்பரா. நாட்டுப். 18) என்று பாடியிருத்தல் வேண்டும். பண்டையுழவர் இயக்கிய கிணைப் பறையே இன்று பள்ளர் கூட்டியத்தில் உறுமி என்று வழங்கி வருகின்றது. ஒருசார் பள்ளரிடை வழங்கும் அஞ்ஞை என்னும் தாய்முறைப் பெயரும். பண்டை நாளில் இன்றுபோல் இழிவழக்காகக் கருதப்படவில்லை. "மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன் அஞ்ஞைநீ யேங்கி யழலென்று...." (சிலப். 9 : 24-25) அன்னை-அஞ்ஞை பள்ளருக் கடுத்தாற்போல் ஒருமருங்கு தாழ்த்தப்பட் டிருந்தவர் நாடார் என்னும் சான்றார் குலத்தார். ஆயின் அவர் தீண்டாதாரல்லர். கோயிலுக்குள் மட்டும் புகவுபெறாம லிருந்தார். கள்ளிறக்குவார் சிவன் கோயில்களுட் புகக்கூடா தென்று ஆகமசாத்திரம் கூறுவதாகச் சொல்லப்பட்டது. |