நாடார்மார் துணிந்து உள்ளூர் மறவரைத் தாக்கினர். அதன் விளைவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் கொண்ட மறவர் கூட்டம், சிவகாசிக்குட் புகுந்து நாடார் மாரை யெதிர்த்துக் கலகஞ் செய்து கொள்ளையடித்தது. 23 கொலைகளும் 102 தீவட்டிக் கொள்ளைகளும் பல தீக்கோள்களும் நிகழ்ந்தன. திருச்சிராப்பள்ளியினின்று படை வந்து கலகத்தையடக்கிற்று. மறவருள் 1958 பேர் தகைக்கப்பட்டனர். 552 பேர் சிறைத் தண்டனையும் எழுவர் கொலைத் தண்டனையும் பெற்றனர். சிவகாசியில் 500 பேர் கொண்ட ஏமக் காவற்படை (Reserve Police Force) நிறுவப் பட்டது.
கலகக் காலத்தில், சிவகாசி நாடார்மார் சிலர் முகமதிய ரானதாகவும், கழுகுமலை நாடார்மார் பலர் உரோமைச் சபைக் கிறித்தவரானதாகவும் சொல்லப்படுகின்றது.
பொதுக்கோவில்களுட் புக இடமில்லாமையால், நாடார் குலத்தார் பிராமணரையே குருக்களாகக் கொண்டு தமக்கெனத் தனிக்கோவில்களைக் கட்டிக்கொண்டனர்.
காந்தியடிகள், ஈ. வெ. ரா. பெரியார், சி. இராசகோபாலாச் சாரியார், வயவர் சி. பி. இராமசாமி ஐயர் ஆகியோர் தொண்டின் விளைவாக, தென்மதக் கோவில்களெல்லாம் தாழ்த்தப்பட்டோர்க்குத் திறக்கப்பட்டபின், நாடார்மார் மனக்குறைவும் நீங்கிற்று.
ஒரு தூய தமிழக்குலத்தாரின் முன்னேற்றத்திற்கு, தமிழரே வலுத்த முட்டுக்கட்டையாயிருந்ததும், தமிழின் வளர்ச்சிக்கு இன்றும் தமிழரே தடையாயிருப்பதும், மிகமிக வருந்தத் தக்கதும் தென்னாப்பிரிக்க நிலையினுங்கேடு கெட்டதுமாகும். இறைவனருளால் ஆங்கிலராட்சி இங்கு ஏற்பட்டதனால், இத்துணை முன்னேற்றம் நிகழ முடிந்தது. இன்றேல், இதற்குள் எத்தனையோ குலத்தார் தாழ்த்தப்பட்டிருப்பர்.
தாழ்த்தப்பட்டவரென்று பொதுவாக ஒருசில குலத்தாரைக் குறிப்பினும், தமிழருள் ஒரு குலத்தாரேனும் பிராமணருக்குச் சமமாகக் கருதப்படாமையால் தமிழர் அனைவரும் தாழ்த்தப்பட்டவரே. இன்று தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுபவர் உண்மையில் ஒடுக்கப்பட்டவரேயாவர்.