பக்கம் எண் :

தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை137

3
தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை


1. தமிழ் தனிமொழி யெனல்


"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
 ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
 மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
 தன்னே ரிலாத தமிழ்"

என்பது தண்டியலங்கார வுரை மேற்கோளாக வந்துள்ள ஒரு பழந் தனிப்பாட்டு.

   இதன் கருத்துரை: பாரில் இரு சுடர்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்று புறவிருள் நீக்கும் கதிரவன்; இன்னொன்று அகவிருள் நீக்கும் தமிழ்.

  இதனால் தமிழின் தொன்மையும் முன்மையும் தாய்மையும் தலைமையும் பெறப்படும்.
தமிழ்மொழி தோன்றியது தோரா. கி.மு. 50,000 ஆண்டு கட்கு முன்; தமிழிலக்கியம் தோன்றியது தோரா. கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன். இரண்டும் தோன்றியது தென்மாவாரியில் முழுகிப்போன குமரிநாட்டில்
(Lemuria).
  
  தமிழ் திரிந்து திரவிடமாயிற்று; திரவிடம் திரிந்து ஆரிய மாயிற்று. ஆரியத்தின் முந்துநிலை செருமானியம்; முதிர்நிலை சமற்கிருதம். ஆகவே, இந்தைரோப்பிய
(Indo-European) மொழிக் குடும்பத்தின் அடிமுனை தமிழ்; முடிமுனை சமற்கிருதம்.

  வேத ஆரியரின் முன்னோர் இந்தியாவிற்குட் புகுந்தது தோரா. கி.மு. 1500. அவர் சிறுபான்மையரா யிருந்ததனால், அவர் மொழி பிராகிருதம் என்னும் வடஇந்திய முந்து மொழிகளோடு கலந்து போயிற்று. அக் கலப்பு மொழியே வேத ஆரியம். பின்னர் வேத ஆரியம் தமிழொடு கலந்து சமற்கிருதம் என்னும் கூட்டு மொழியாகிய இலக்கிய மொழி தோன்றிற்று.