கல்வி சற்றுப் பரவியபின், துவக்கக் கல்வியாசிரியப் பயிற்சி நீக்கப்பட்டுவிட்டது. கல்விப்பட்டத்துடன் ஒத்திருக்கு மாறு, கற்பிப் புரிமையர் (L.T.) என்பது கற்பிப் பிளங்கலைஞர் (B.T.) என மாற்றம் பெற்றது.
இத்தகைய திருத்தங்களும் மாற்றங்களுமே காலப்போக்கிற்கு ஏற்றவாறு கல்வித் துறையில் செய்யத் தக்கன.
ஆயின், முன்னை இடைநடு என்னும் ஈராண்டுக் கடவையை நீக்கிவிட்டு இன்று பல்கலைக்கழக முன்னை வகுப்பு (P.U.C.) என்னும் ஓராண்டுக் கடவையைப் புகுத்தி யிருக்கின்றனர். இடைநடு மேற்கல்விக்கு மட்டுமன்றி வேலைப் பேற்றிற்கும் பயன்பட்டது. ப. மு. வ. வோ, காலத்திற்போற் கல்வியிலுங் குறுகி இரண்டுங் கெட்ட நிலையிலுள்ளது; தமிழ்வாயிற் கல்விகற்ற மாணவர்க்கு மிகுந்த இடர்ப்பாட்டையும் உண்டாக்கியுள்ளது. ஆதலால், உயர்நிலை வழிமுறைக் கல்வி (Higher Secondary) என்னும் பெயரால் மீண்டும் இடை நடுவைப் புகுத்தக் கருதுகின் றனர். இது முட்டிவிட்டுக் குனிதல்.
இனி, இம்மியும் பகுத்தறிவும் வரலாற்றறிவும் நடுநிலையும் ஆங்கிலராட்சியாலேற்பட்ட அளவிறந்த நன்மையை யுணரும் ஆற்றலு மின்றி, அவர் நீங்கிய பின்பும் அளவிறந்து அவரைப் பகைத்து, அதே சமையத்தில் அவர் மொழியினாலேயே அறிவடைந்து பதவி பெற்றுச் சிறப்பாக வாழ்ந்துகொண்டு, நன்றிகெட்ட தனமாகவும், துணிச்சல்மிக்க பேருலகப் புரட்டாக வும், அடிமைத்தனத்தை யுண்டாக்கும் அயன் மொழியாகிய ஆங்கிலத்தை அறவே அகற்றி எல்லாக் கல்வியையும் இறுதி வரை தாய்மொழியிலேயே கற்பிக்க வேண்டுமென்று, இந்தி வெறியர் அல்லும் பகலும் அரற்றியும் அரட்டியும் வருகின்றனர். இது ஆங்கில இடத்தில் இந்தியைப் புகுத்தி, இந்தியரல்லாத இந்தியரையெல்லாம் அடிமடையரும் அஃறிணைப் பிண்டங்களுமாக மாற்றச் செய்யும் சூழ்ச்சி யாகும். இதையறியாத சில பேதையரும் எல்லாக் கல்வியையும் இறுதிவரை தமிழிலேயே கற்பிக்க வேண்டுமென்று தம்பட்டமடிக்கின்றனர். தமிழ்ப் பற்றில்லாத சில துணைவேய்ந்தரும் இக் கொள்கையைக் கடைப்பிடிப்பது வருந்தத்தக்க தாயுள்ளது. மருத்துவம் போன்ற அறிவியலை இற்றை நிலையில் இந்திய மொழிகளிற் கற்பிக்கவே இயலாது. கிரே (Henry Grey) இயற்றிய அக்கறுப்பு (Anatomy) நூலைப் பார்த்தவர்க்கு இது தெளிவாக விளங்கும். ஆயிரக் கணக்கான மருந்துப் பெயர்களையும் உடனே மொழிபெயர்க்க முடியாது.