பாராளுமன்று என்னும் சொல் பாராளுமன்று என்பது Parliament என்னும் ஆங்கிலச் சொல்லை ஒலியொட்டிய சொல்லேயன்றி, அதன் உண்மையான மொழி பெயர்ப்பன்று. பாராளுமன்று என்னுந் தமிழ்ச் சொல் பார் + ஆளும் + மன்று (சவை) என்னும் முச்சொற்கூட்டு. Parliament என்னும் ஆங்கிலச் சொல், பேச்சு அல்லது பேசும் அவை என்று பொருள்படும் ஒரே சொல். அது பேசு என்று பொருள்படும் Parler என்னும் வினைமுதனிலையும் ment என்னும் ஈறுங் கொண்ட parliament என்னும் பிரெஞ்சுச் சொல்லின் திரிபு. arrangement, encouragement, statement, treatmen t என்னும் ஆங்கில வினைப்பெயர்களில், ment என்பது ஈறாக வந்திருத்தல் காண்க. வினையாகு பெயராக ஆளப்படும் ஆங்கிலச்சொல்லை விடப் பாராளுமன்று என்னும் முக்கூட்டுத் தமிழ்ச்சொல் மிகப் பொருத்தமானதே. ஆயின், ச. இராசகோபாலாச்சாரியார் அதை மறுத்து நாடாளுமன்று என்னுஞ் சொல்லை வழங்கச் சொன்னதிலிருந்து, அங்ஙனமே வழங்கிவருகின்றது. இந்திய வுறுப்பு நாடுகளைத் தமிழ்நாடு, தெலுங்கநாடு, கன்னடநாடு, கேரளநாடு என்றே வழங்கிவருவதால், நாடாளுமன்று என்பது நாட்டுச் சட்டசவையைக் (States Legislature) குறித்தற்கே ஏற்றதாம். ஆதலால், பல நாடுகட்குப் பொதுவான நடுவணாளு மன்றத்தைப் பாராளுமன்றம் என்று சொல்வதே தக்கதாம். எதிர் காலத்தில் உலக ஆட்சி மன்றம் ஏற்படினும், அதை உலகாளு மன்றம் என்று சொல்லலாம். பாராளுமன்றத்தை நாடாளுமன்றம் என்பதால் கூட்டு நாடாகிய இந்தியாவை ஒரு தனிநாடு என்று கொள்வதற்கு இடந்தருவதுடன், நாடாளுமன்றங்களைக் குறிக்க ஒரு சொல்லும் இல்லாமற் போய்விடுகின்றது. சென்ற இரு நூற்றாண்டுகளிலும், தென்னாப்பிரிக்கா, உகாண்டா, மௌரிசியசுத் தீவு முதலிய மேற்கத்து நாடுகளிலும், இலங்கை, கடாரம் (பர்மா), மலேசியா, சிங்கபுரி (சிங்கப்பூர்), பிசித்தீவு (Fiji Islands) முதலிய கிழக்கத்து நாடுகளிலும், உள்ள பழங்குடி மக்கள் ஒரு தொழிலுந் தெரியாது இடர்ப்பட்டுக் கொண்டிருந்த இருண்ட காலத்தில், இந்தியர், சிறப்பாகத் தென்னாட்டார், அந் நாடுகட்குச் சென்று |