பக்கம் எண் :

உலகக் கூட்டரசு189

யாமம், வைகறை என்னும் அறுவகைச் சிறுபொழுதும் ஆகிய காலவேறுபாடு.
 
3.உழவு, கைத்தொழில், ஆடுமாடு மேய்த்தல், வணிகம், காவல், வேட்டையாடல், கடத்தம் (Transport), மீன் பிடித்தல், முத்துக் குளித்தல் முதலிய உழைப்புவேலைக் கேற்ற உடம்பமைப்பு வேறுபாடு.
 4. தச்சு, கொல், கல்தச்சு (சிற்பம்), கன்னாரம், தட்டாரம் என்னும் ஐங்கம்மியம் போன்று பல்தொழிற் பிரிவுகள்.
 5. படிமைவினை, கண்ணுள்வினை (வண்ண ஓவியம்), அருங்கல வினை, நுண்பூங்கலிங்க வினை முதலிய பல நுண்கலைகள்.
 6. உடம்பின் வளர்த்தி, பருமன், கனம், வலிமை முதலிய வற்றின் வேறுபாடுகள்.
 இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணிக்கு அல்லது வினைக்குச் சிறக்கும்.
 7. உறுப்பமைப்பு வேறுபாடுகள்.
 இசைக்கருவியியக்குவார்க்கும் ஓவியர்க்கும் பின்னல் முடைதல் வினைஞர்க்கும் விரல்கள் நீண்டு விரைந்து வளைவனவா யிருத்தல் வேண்டும்.
 நடிகருக்கும் நடனருக்கும் காவலருக்கும் கண்ணுங் கையுங் காலும் உரத்து விரைந்து இயங்குவனவா யிருத்தல் வேண்டும்.
 முத்துக் குளிப்பார்க்கு நீண்டநேரம் மூச்சடக்குமாறு மூச்சுப் பை வலுத்திருத்தல் வேண்டும்.
 இங்ஙனமே பிறவும்.
 8. குரல் வேறுபாடுகள்.
 பாடகர்க்கு இன்குரலும் சொற்பொழிவாளர்க்கு வன் குரலும் வேண்டும்.
 9. ஆள்வினை, கல்வி, இலக்கியம், மருத்துவம், கணியம், இசை, நாடகம், இன்பவினை, கடவுள் வழிபாடு, உயிர்நூல், மறுமை நிலை முதலியனபற்றி ஆராய்ந் தறிதற்கேற்ற அகக்கரண அமைப்பு வேறுபாடு.