பக்கம் எண் :

224மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

சுந்தர பாரதியாரும், இலக்குவனாரும்போல் தமிழைப் போற்றிக் காப்பது இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் தலைமேல் விழுந்த தலையாய கடமையாம்.

  மேலையாரியர் தமிழ்ச்சொற்களை ஆண்டவாறே நாமும் ஆள வேண்டுமென்றும், சொல்லாக்கத்தில் அவர் கையாண்ட நெறிமுறைகளையெல்லாம் நாமும் கையாள வேண்டு மென்றும் யாப்புறவில்லை. நம் முன்னோர் மரபைப் பின் பற்றியே நாம் சொற்களை ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். கலைக் குறியீடுகளைத் தமிழில் மொழி பெயர்க்க முடியா தென்பார் கூற்றை மறுக்கவே, இதுகாறுங் கூறப்பட்டதென அறிக.
 

* * * * *


மக்கள் வாழ்த்து

தேவ மொழியெனுந் தெட்டை நீக்கியே
ஏவ ருந்தமிழ் எமது மொழியென
மேவி வாழியர் மேலை மறந்தபின்
தாவில் நல்லிசைத் தமிழம் ஓங்கவே.

உள்ள நற்றொழில் உஞற்றித் தம்முடைப்
பள்ளி யிருந்துணாப் பகிர்ந்துண் டின்பமாய்த்
தெள்ளு கற்புடைத் தேவி யோடறம்
வள்ளு வர்மதி வகுத்த வாழ்வரோ.

மிக்க பிறப்பினை மிண்டித் தடுத்தபின்
தக்க அறிஞரைத் தலைவ ராக்கியே
ஒக்க ஒன்றிய வுலக ஆட்சியில்
மக்கள் வாழியர் மண்ணில் விண்ணிதே.