கி.மு. ஆயிரம் ஆண்டுகட்குமுன் நிகழ்ந்த பதினெண்ணாட் பாரதப்போரில், பாரின் சுமை தீர்ந்த தென்னும்படி, பல்லிலக்கம் பேர் மடிந்திருத்தல் வேண்டும். "நீபா ரதவமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரந் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா"(பாரத. கிருட்டி. 34) 1565-ல் விசயநகரப் பேரரசிற்கும் ஐ முகமதிய வரசு கட்கும் நடந்த தலைக்கோட்டைப் போரில், ஓரிலக்கத்திற்கு மேற்பட்ட வர் கொலையுண்டனர். முதலாம் உலகப்போரில் (1914-8) ஏறத்தாழ 85.5 இலக்கம் பேரும் (85,38,315), இரண்டாம் உலகப்போரில் (1939-45) ஒன்றரைக் கோடிக்கு மேற்பட்டவரும் மாண்டனர். இலண்டன் மாநகரத்தில் 1348-49இல் ஒரு கொள்ளை நோயும் (The Black Death), 1665இல் ஒரு பெருவாரியும் (Great Plague), 1666இல் ஒரு பேரெரியும் (Great Fire) முறையே, 1/3 பங்கும், 1/10 பங்கும், 1/2 பங்கும் மக்களுயிரைக் கொள்ளை கொண்டன. திருப்பொத்தகத்திற் (Bible) சொல்லப்பட்டுள்ள நோவா காலத்து வெள்ளத்திலும், கி.மு. 1500இற்குமுன் தென்குமரிக் கண்டத்திலும் கீழ்த்திசை நாடுகளிலும் நிகழ்ந்த கடல்கோள் களிலும், எத்தனை கோடியர் மூழ்கினரோ, அறியோம். கி.பி.79-ல் நிகழ்ந்த வெசுவீயசு (Vesuvius) எரிமலைக் கொதிப் பால், பாம்பேய் (Pompeii) என்னும் இத்தாலிய நகரம் 12 அடி ஆழத்திற் புதையுண்டது. 1975-ல் சீனத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் முப்பானிலக்கவர் மறைந்தனர் போலும்! இனி, கிறித்துவிற்கு முற்பட்ட நாடுகள் சிலவற்றின் அரசர்க்கு, நாட்டில் அல்லது ஓர் இனத்திற் பிறக்கும் ஒரு தலைமுறைக் குழவிகளையெல்லாம் கொல்விக்கும் அதிகாரமும் இருந்தது. சென்ற நூற்றாண்டுவரை, ஆப்பிரிக்காவிலும் ஆத்திரேலி யாவிலும் கீழைநாடுகளிலும் நரவூனுண்ணலும் (cannibalism), தலை வேட்டையாடலும் (head-hunting) , ஒவ்வொரு சாவிற்கும் இன்னொருவரைக் கொல்லும் பேய்மந்திரிகமும ்(witchery ) இருந்துவந்தன. இங்ஙனம் எத்தனையோ கேடுகள் அடுத்தடுத்து உலகெங் கணும் நிகழ்ந்து வந்தனவேனும், மக்கட்டொகை மேன்மேலும் பெருகிக் கொண்டே வந்திருக்கின்றது. |