சிவ மாலிய சமண புத்தத் துறவியரும் உரோமைச் சபைக் கிறித்தவக் குருமாரும், இவ்வகையில் நாட்டிற்கும் உலகிற்கும் பெருந்தொண்டு செய்பவராவர்.
2. மணவகவை யுயர்த்தம்
முதற்கண் ஆடவர்க்கு 25-ம் பெண்டிர்க்கு 20-ம், பின்னர் முன்னவர்க்கு 30-ம், பின்னவர்க்கு 25-ம் ஆக மண அகவையை உயர்த்துதல் வேண்டும்.
3. மணவாண்டு குறிப்பு
எவ்வாண்டிலும் எம்மாதத்திலும் எந்நாளிலும் மணஞ் செய்யாவாறு, முதற்கண் ஐயாண்டிற்கும் பின்னர்ப் பத்தாண் டிற்கும் ஒரு முறையே மக்கள் மணஞ்செய்யுமாறு, அரசு மணவாண்டு குறித்தல் வேண்டும். நன்மாதமும் நன்னாளும் பார்ப்பார்க்கும் ஓராண்டு போதும். இது திருமண ஒத்திவைப்பு.
4. பிள்ளைப்பே றில்லாதவரைப் பாராட்டல்
பிள்ளைப்பேறு பண்டை நல்வினைப் பயன் அல்லது திருவருட் பயனென்றும், பிள்ளைப்பேறின்மை பண்டைத் தீவினைப் பயன் அல்லது இறைவன் சாவிப்பு (சாபம்) என்றும், பிள்ளைப்பேறே செல்வத்துட் செல்வமென்றும், அஃதில்லா தார் ஓர் எரிநரகை யடைவரென்றும், பல தவறான நம்பிக்கைகள் இன்னும் ஒருசார் மக்களிடை யிருந்துவருகின்றன. இவற்றுள் ஒன்றைக் கரணியமாகக் கொண்டும், தம் பெண்ணின்ப நுகர்ச்சியை மிகுத்தற்பொருட்டும், தம் முதல் மனைவியின் இசைவைப் பெற்றோ பெறாதோ சிலர் மறுமணஞ் செய்துள்ளனர்.
பிள்ளைப்பேறில்லாதவர் அஃதுள்ளவர் முன் உள்ளத்தி லேனும் நாணி வருந்தாவாறு, அரசும் பொதுமக்களும் புலவரும் இனி அத்தகையோரையே பாராட்டி வாழ்த்துதல் வேண்டும்.
5. இருபிள்ளை வரம்பும் கட்டாய மலடாக்கமும் (Sterilization)
பிள்ளை பெறுபவர் இருபிள்ளைக்குமேற் பெறுதல் கூடாது. இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகட்குப் பங்கீட் டுரிமையும் தகாது. மிகைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துண்டலே பெற்றோரியல்பாகு மாதலால், இருபிள்ளை யென்னும் வரம்பீடு மட்டும் போதாது. இரண்டாம் பிள்ளைக்குப் பின் தாய்க்குக் கட்டாய மலடாக்கமுஞ் செய்தல் வேண்டும்.