பக்கம் எண் :

68மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

இனி, உலக முழுதும் தொன்றுதொட்டுக் குடிப்பாகவும் குழம்பாகவும் பயன்பட்டு வருவதும், குழவிப்பருவம் முதற் கிழப்பருவம்வரை வாழ்நாள் முழுதும் ஊட்டந் தருவதும், ஆனைந்து என்னும் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் ஆகிய ஐவகையில் ஆரமுதாவதுமான ஆவின்பால், எல்லா வகுப்பார்க்கும் வேண்டியிருப்பதனாலும், குழவிக்குத் தாய்ப்பால் போல் நோயாளிக்கு முற்றுணவாக உதவுவதனாலும், நாடு முழுதும் ஆன்பண்ணைகள் நிறுவுதல் வேண்டும்.

  இலக்கக்கணக்கான தொன்
(tonnes) பாற்பொடியும் பல்லாயிரக்கணக்கான தொன் வெண்ணெயெண்ணெயும் (butter oil) வெளிநாடுகளினின்று இங்கு இறக்குமதியாகின்றன. அவை நின்று விடின், இங்குள்ள பாற்பண்ணைகளின் தரவு (supply) குன்றும். ஆதலால், ஆன்பண்ணைகள் நிறுவல் இன்றியமையாதது.

  இனி, ஆன்பண்ணைகளாற் காளைகளும் பெருகுமாதலால், அரசு காளைப்பண்ணைகளும் நிறுவி, ஏழையுழவர்க்குக் காளைகளை இலவசமாகவோ எளிய விலைக்கோ கொடுக்கலாம்.


2. கைத்தொழிலைப் பெருக்குதல்


நெசவு


  தமிழ்நாட்டுப் பெருவாரித் தொழில்களுள் நெசவு ஒன்றாதலால், நூல் ஒழுங்காக நேர்மையான விலைக்குக் கிடைக்கச் செய்தல், நெசவுக் கூலியை வாழ்க்கைக்குப் போதிய அளவாக்குதல், கைத்தறியை மின்தறி யாக்குதல், உடையினம் ஒன்றிரண்டைத் தறிநெசவிற்கே உரிமை யாக்குதல், அரசியல் அலுவலரையெல்லாம் ஒரு குறித்த அளவு தறிநெசவாடையை வாங்குமாறு செய்தல், அரசியல் அலுவலகங்கட்கும் கொண் டாட்டங்கட்கும் தறிநெசவுத் துணியையே வாங்குதல், விலை யாகாது குவிந்து கிடக்கும் தறியாடைகளையெல்லாம் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்தல், திட்பமும் நுட்பமும் ஓவியமும் சிறந்த நெசவுவினைஞர்க்குப் பரிசளித்தல், தறிநெசவுத் தொழில் இடையீடின்றி நடைபெறுவித்தல் முதலிய செயல்களால் அரசு அதனை ஊக்குதல் வேண்டும்.

  பண்டைத் தமிழ் நெசவாளர்போல், "அரவுரி யன்ன அறுவை" (பொருநர். 82-3), "காம்பு சொலித் தன்ன அறுவை" (சிறுபாண்.236), "ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம்" (பெரும் பாண். 469), "இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்"(மலைபடு.