| ம. ம : | தொல்காப்பியர் ஓர் இலக்கணியேயன்றி மொழி நூற் புலவரல்லர். ஆகையால் சில சொற்களை ஈறு நீக்கிப் புணர் நிலை வடிவிற் குறிப்பர். மத என்று ஓர் உரிச்சொல்லைக் குறித்துள்ளார். அது மதம் மதன் என்று வழங்குதல் காண்க. இங்ஙனமே பிறவும் என்பது. |
சொற்கள் சொல்லியல் முறையில், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என, நால்வகையாக வகுக்கப்படும். இவற்றுள், இயற்சொல் (Primitive word) என்பது இயல்பான சொல்; திரிசொல் (Derivative word) என்பது அவ்வியற் சொல்லினின்றும் திரிந்த அல்லது திரிக்கப்பட்ட சொல். இவற்றிற்கு இவையே பொருள் என்பதை, இப் பொருட் பொருத்தத்தினின்றும், கிளி - கிள்ளை, மயில் - மஞ்ஞை என்பவற்றை உறுப்புத் திரிந்தவையென்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பதினின்றும் உணர்ந்துகொள்க. இயற்சொல் லெனினும் வேர்ச்சொல் லெனினும் ஒக்கும். இது முதல்வேர், வழிவேர், சார்புவேர் என மூவகைப்படும். பளீர், பளிச்சு முதலிய சொற்களில் வேராயிருப்பது பள் என்பது. இது முதல்வேர். பள் என்பதன் திரிபு பால் என்பது. இது வழிவேர். பால் என்பது வால், வெள் என்று திரியும். இவை சார்பு வேர். சில சொற்களில் ஒவ்வோர் எழுத்தே பொருள் நிறைந்திருக்கும். அவ் வெழுத்தை விதையெழுத்தென்னலாம். பள் என்னும் சொல்லில் 'ள' விதையெழுத்தாகும். ந(ன)ம ல ள என்ற எழுத்துகள் ஒளிபற்றிய சொற்களில் வருதல் பெரும்பான்மை. திரிசொல்லும் முதல், வழி, சார்பு என மூன்றாம். | கா : | வேர் | முதல்திரிவு | வழித்திரிவு | சார்புத்திரிவு | ஏ | ஏண் | சேண் | சேணோன் | அர் | அரி | அரம் | அரவு, அராவு |
திசைச்சொல் என்பது, செந்தமிழ் நாட்டில் வழங்கும் பொருளினின்றும் வேறான பொருளில் வழங்கும் கொடுந்தமிழ்ச் சொல்லாகும்.
|