பக்கம் எண் :

46ஒப்பியன் மொழிநூல்

“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே”

(மரபு. 77)

என்று தொல்காப்பியங் கூறுவதாலும், மள்ளர், மழவர் என்னும் பெயர்கட்கு உழவர் மறவர் என்னு மிரு பொருளு முண்மையாலும், உழவர் குலத்தில் ஒரு வகுப்பார் படையாட்சியென்று பெயர் பெற்றிருப்பதினாலும், மேனாட்டிலும் கீழ்நாட்டிலுமிருந்த பண்டை அமரநாயக (Feudalism) முறையாலும் அறியலாம்.

பண்டைக் காலத்தில் அரசரையும் தெய்வமாக வணங்கினர் என்பது, இரணியன், நேபுகாத்தேச்சார் முதலியோர் சரித்திரத்தாலும், அரசனும் தெய்வமு மிருக்குமிடம் கோயில் என்று கூறப்படுவதினாலும், அரசனுக்கும் அரசிக்கும் தேவன் தேவி என்னும் பெயர்கள் வழங்குவதாலும், திரு வாய்க் கேள்வி திருமந்திர வோலை முதலிய அரசக அலுவற் பெயர்களாலும், பிறவற்றாலும் அறியப்படும்.

வேந்தன் என்னும் பெயரையே, இந்திரன் என்று ஆரியர் மொழிபெயர்த்துக்கொண்டனர். இந்திரன் = அரசன். நரேந்திரன், மிருகேந்திரன், கவீந்திரன் முதலிய பெயர்களை நோக்குக.

நூறு குதிரைவேள்வி வேந்தன் (இந்திரன்) பதவிக்குத் தகுதியாக ஆரியப்பழமைநூல் கூறும். குதிரைவேள்வி செய்பவன் அரசனே.

கடைக்கழகக் காலம்வரை வேந்தன் வழிபாடு தமிழ்நாட்டிற் சிறந்திருந்ததென்பது, சிலப்பதிகாரத்தாலும் மணிமேகலையாலும் பிறநூல் குறிப்புகளாலும் அறியப்படும்.

(ஆயர்பாடியில் வேந்தன் வழிபாட்டை நிறுத்திய) கண்ணன் வழிபாடு வரவரத் தமிழ்நாட்டில் வலுத்ததினாலும், நகர மாந்தருள் உழவர் சிறுபான்மையானதினாலும், வேந்தன் மழைவளம் ஒன்றே தரும் சிறுதெய்வமாதலாலும், சைவம் திருமாலியம் என்னும் இரண்டும் வீடுபேற்றிற்குரிய பெருமதங்களாய் வளர்ந்துவிட்டமையாலும், வேந்தன் வணக்கம் பெரும்பாலும் நின்றுவிட்டது. இதுபோது ஒரோ வோரிடத்துள்ள மழைத் தெய்வவுருவமே பண்டை வேந்தன் வழிபாட்டின் அடையாளமாயுள்ளது.