0.4 மேற்கூறிய பொதுவான நடைமுறைகளைக் கவனத்தில் கொண்டு எவ்வாறான நிலைகளில் சொற்கள் சேர்த்து எழுதப்பட வேண்டும், எவ்வாறான நிலைகளில் இடம்விட்டு எழுதப்பட வேண்டும் என்று இங்கே காட்டியிருக்கிறோம். | முதலில், சொற்களுக்கு உரிய இலக்கண வகைகளின் கீழ் சேர்த்து எழுதப்பட வேண்டியவற்றையும் இடம்விட்டு எழுதப்பட வேண்டியவற்றையும் இலக்கண அமைப்பில் சொற்கள் என்ற தலைப்பில் தொகுத்துத்தந்திருக்கிறோம். பெயர்ச்சொல்லை அடுத்து மற்றொரு பெயர்ச்சொல், பெயரடையை அடுத்து பெயர்ச்சொல் போன்றவை இலக்கண அமைப்பில் சொற்கள் என்ற பகுப்பில் வரும் சில தலைப்புகள். இரண்டாவதாக, பல்வேறு தனிச் சொற்கள் - எடுத்துக்காட்டாக, ‘அல்ல’, ‘அல்லது’, ‘அளவில்’ முதலியவை - பிற சொற்களோடு எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதைத் தனிச் சொற்களை எழுதும் முறை என்ற தலைப்பில் காட்டியிருக்கிறோம். சேர்த்து எழுதுவதா, இடம்விட்டு எழுதுவதா என்று எளிதில் தீர்மானிக்க முடியாத சொற்களே தனிச் சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இச் சொற்கள் அகரவரிசையில் உள்ளன. ஒவ்வொரு தனிச் சொல்லுக்கும் தந்திருக்கும் விளக்கத்தில் (1) சில அடிப்படைகளைக் கொண்டு உறுதியாகத் தீர்மானித்தவற்றை ‘சேர்த்து எழுத வேண்டும்’/’இடம்விட்டு (அல்லது தனித்து) எழுத வேண்டும்’ என்றும் (2) பயன்பாட்டின் அடிப்படையில் ஏதேனும் ஒன்று மிகுதியாக இருக்கலாம் என்று உணர்வதால் ‘சேர்த்து எழுதப்படுகிறது’/’இடம்விட்டு எழுதப்படுகிறது’ என்றும் (3) இரு முறையிலும் எழுதுவது சம அளவு எனத் தெரியவந்தால் ஒன்றைப் பரிந்துரைக்கும் வகையில் ‘சேர்த்து எழுதலாம்’/ ‘இடம்விட்டு எழுதலாம்’ என்றும் கூறியிருக்கிறோம். சேர்த்து எழுதப்பட வேண்டியவை அனைத்தும் இடது பக்கத்திலும் இடம்விட்டு எழுதப்பட வேண்டியவை அனைத்தும் வலது பக்கத்திலும் பிரித்துத் தரப்பட்டுள்ளன. இந்த இட-வல இரு பத்தி அமைப்பு, ஒரே சொல் ஓர் அமைப்பில் சேர்த்தும் மற்றொரு அமைப்பில் இடம்விட்டும் எழுதப்பட்டிருக்குமானால் அதைத் தெளிவாகக் காட்டிவிடும். | | |
|
|