சிவப்பும் வெகுளி (கோபம்) என்னும் பொருள் உணர்த்தும் என்பது.
இதற்கு அடுத்த 373-ஆம் நூற்பா ‘நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய
என்ப" என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். அவை நிற வேறுபாடு
உணர்த்தற்கும் உரியவை என்பது இந்த 373-வது நூற்பாவின்
பொருளாகும். கருப்பு - பஞ்சம், கறுப்பு - கருநிறம். இந்த
வேறுபாடு காட்டுவதற்கு இவ்வாறு தொல்காப்பியர் அமைத்தார்
போலும். நன்னூலார் இச்சொல்லைக் குறிப்பிடாமல் பிற
உரிச்சொற்களுக்குப் பிங்கல நிகண்டைக் காண்க என்றார். அது
"கறுப்பு - கருநிறமும் சினக் குறிப்பும் கறுப்பே" என்கிறது. [நிகண்டு
என்பது நூற்பாவில் பொருள் கூறும் அகராதி
(Dictionary) ஆகும்.]
கணவன் செத்தால் பாடும் ஒப்பாரிப் பாட்டிலும்,
"மஞ்சள் இழந்தேன்
மருதாணி தான் இழந்தேன்
கறுப்பும் சிவப்பும் கலந்துடுத்தும்
நாளிலே எனக்கு வெள்ளை
உடுக்கு விதிவந்து நேர்ந்ததே!"
கறுப்பு என்னும் சொல் இவ்வாறு வந்திருப்பதைக் காண்கிறோம்.
ஆதலால், கறுப்பு, கறுப்புச்சாமி கறுப்பண்ணன் என்று எழுதுவதே
மரபாகக் கொள்க. கருப்புச்சாமி, கருப்பண்ணன் என்று சிலர் தம்
பெயர்களை எழுதக் காண்கிறோம். இப்படி எழுதினாலும் ஏற்றுக்
கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் ஒருவர் தம் பெயரை எப்படி
எழுதினாலும் ஏற்றுக் கொள்ளும் மரபு உண்டு. நீக்ரோவர் கறுப்பர்
என்று எழுதுவதே சரியானது. நீக்ரோவர் கருநிறத்தவர் என்றெழுதினால்
தொல்லை இல்லை கருமை - பண்புச் சொல், கறுப்பு - பெயர்ப்
போலி போலும்.
சிவப்பு முதல் ஒளவையார் வரையிலும் உள்ளவற்றை
இருவகையாகவும் எழுதலாம். இவை போலி என்னும் இலக்கணத்துள்
அடங்கும்.
|