|
இந்த நுட்பங்களை அறிவதற்குத்
தமி்ழ்த் தேர்ச்சி வேண்டும்
என்பது சொல்லாமலே விளங்கும்.
மேலும் தமிழ் இலக்கணம்
கற்பதால் தமிழர் முன்னோரது
தனிமேதைச் சிறப்பு (Tamil Genius) நமக்கு நன்கு புலனாகும்.
எடுத்துக்காட்டாக, இரண்டாம் வேற்றுமைக்குக் கூறிய நோக்கல்
பொருள் இருவகைப்படும். 1. நோக்கிய நோக்கம். 2.
நோக்கல் நோக்கம்.
(நோக்கிய நோக்கம் - கண்ணால் நோக்குதல்; நோக்கல் நோக்கம் -
மனத்தால் நோக்குதல்.)
"வான்நோக்கி வாழும் உலகெல்லாம்;
மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி."
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் - உயிர்கள் எல்லாம் மழை
யை மனத்தால் எண்ணி வாழும். குடி மன்னவன் கோல்நோக்கி வாழும்
- குடிமக்கள் மன்னவன் செங்கோல் ஆட்சியைக் கண்ணால்
பார்த்து வாழ்வார்கள்.
தமிழில் மரபுத் தொடர்களும்
(Idioms), சொற்றொடர்களும்
(Phrases) உண்டு. அவற்றைப் பயன்படுத்தித் தமிழை அழகாக
எழுதலாம். உவமைகளைப் பயன்படுத்த வசதிகள் தமிழில் மிகமிக
உண்டு.
தமிழில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து எட்டாயிரத்துப்
பத்துக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. சென்னைப் பல்கலைக் கழக
அகராதியில் 2,08,010 தமிழ்ச் சொற்கள் இருக்கக் காணலாம். அரி
என்னும் ஒரு சொல்லுக்கு மட்டும் அகராதியில் 109
பொருள்களைக்
காண்கிறோம். அந்த 109 பொருள்களும் 50 பொருள்கள்
வடமொழிச்
சொற்களைத் தழுவியவை; மற்ற 59 பொருள்கள் அரி என்னும்
தமிழ்ச் சொல்லுக்கே உண்டு. இப்படிப் பொருள் வளம் பெற்றுள்ள
சிறப்பும் தமிழுக்குண்டு. 59 பொருள்கள் தமிழ்மொழிக்கு வர
வேண்டுமென்றால் அது நீண்ட காலமாய் மக்கள் புழக்கத்தில்
இருந்திருத்தல் வேண்டும். இது தமிழ்மொழியின்
தொன்மையையும்
காட்டும்.
|