பக்கம் எண் :

16செந்தமிழ்ச் சிறப்பு

3

3

தமிழின் தனியியல்புகள்

    தமிழ், வரலாற்றிற் கெட்டாத முதுபழந் தொன்மொழியாதலாலும், அது தோன்றிய பழம் பாண்டிநாடு தென்மாவாரியில் முழுகியும், அந் நிலத் தெழுந்த முதலிரு கழக நூல்களும் தமிழ்ப் பகைவரால் அழியுண்டும் போனதனாலும், அதன் தனியியல்புகள் நெடுங்காலத் திடமன நடுநிலை ஆராய்ச்சியின்றித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராலும் அறியவொண்ணாதனவா யிருக்கின்றன. அவ்வியல்புகளாவன:-

1. தொன்மை

    “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
    தன்னே ரிலாத தமிழ்’’

என்பது, தண்டியலங்கார உரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள பழம் பா.

    தமிழை உலகத் தகவிருளை யகற்றும் சுடராகச் சொன்னதின் கருத்து, அது உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யென்பதே. அதனாலேயே, அப் பாவைப் பாடியவர், தமிழை ஒப்புயர்வற்ற மொழியென்றுங் கூறி முடித்தார்.

    எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொருள் வெண்பா மாலையின் ஆசிரியராகிய ஐயனாரிதனார், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலைநிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்குமிடத்து,

    “பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
    வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
    கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
    முற்றோன்றி மூத்த குடி’’  

(பு. வெ. 35)

என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. குறிஞ்சி முல்லைவாணர் மிகப் பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.