6
6
தமிழும் திராவிடமும் தென்மொழியும்
தமிழ், திரவிடம், தென்மொழி என்னும் முப்பெயரும்
ஒருபொருட் சொற்களாய்த் தமிழையே நெடுங்காலம் குறித்து வந்திருப்பினும், இன்றை நிலைக்கேற்ப,
தமிழின் மூவேறு நிலைகளை உணர்த்தற்குரியனவாய் உள்ளன.
குமரிநாட்டுத் தமிழ்மக்களுள் ஒரு சாராரும் அவர் வழியினரும்
மக்கட் பெருக்கம், கடல்கோள் முதலிய கரணியம் (காரணம்) பற்றி மெல்ல மெல்லப் படிப்படியாய்ப்
பனிமலை (இமயம்) வரை படர்ந்து பரவிய பின், வேங்கடக் கோட்டத்திற்கு வடக்கிலுள்ள நாவலந்தேயப்
பகுதி, தட்ப வெப்பநிலை, உண்டி, பழக்கவழக்கம், சுற்றுச் சார்பு முதலியவற்றின் வேறு பாட்டினாலும்,
பாண்டிநாட்டுத் தொடர்பின்மையாலும், நாளடைவில் சிறிது சிறிதாய் வடக்கு நோக்கி மொழி பெயர்
தேயமாய் மாறிற்று. அங்குச் செந்தமிழ்ப் புலவரும் அவரைப் போற்றும் சீரிய புரவலரும் இன்மையால்
மக்கள் மொழியுணர்ச்சியும் பலுக்கல் (உச்சரிப்பு) முயற்சியும் குன்றி முன்னோர் மொழியைப்
பல்வேறு வகையில் திரித்தும் சிதைத்தும் பேசலாயினர். அதன் பின் திரியாத் தமிழ் செந்தமிழ்
என்றும், திரிந்த தமிழ் கொடுந்தமிழ் என்றும் பெயர் பெற்றன.
"வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"
என்று கி.மு. 7ஆம் நூற்றாண்டினதாகிய தொல்காப்பியத்திற்குச்
சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூறுவதால், தொல்காப்பியர் காலத்திலும் வேங்கடம்
(திருப்பதி) வரையும் செந்தமிழ் நாடும் அதன் வடக்கே கொடுந்தமிழ் நாடும் பரவியிருந்தமை பெறப்படும்.
தென் பெருவாரியில் முழுகிப் போன குமரிக்கண்டத் தமிழ்நிலம் முழுவதும் பழம் பாண்டி நாடாதலாலும்,
தமிழ் தோன்றி வளர்ந்ததும் முத்தமிழ்க் கழகமும் நிறுவப்பெற்றதும் தமிழ்நாடெனச் சிறப்பித்து
சொல்லப் படுவதும் பாண்டிநாடே யாதலாலும். இன்றும் தமிழ் தெற்கு நோக்கியே சிறந்து தென்கோடியில்
தூய்மை மிக்கிருப்பதாலும், குமரிக்கண்டம் முழுகும் முன் வேங்கட முதல் தென்பாலிமுகம் வரையும் (ஏறத்தாழ
2500 கல் தொலைவு) செந்தமிழ் நாடாயே இருந்திருத்தல் வேண்டும். இனி,
|